ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு மதிப்பெண்ணில் மாற்றம் இல்லை':கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் 

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வு தொடர்பாக, சட்டசபையில், நேற்று விவாதம் நடந்தது. 

அதன் விவரம்: இ.கம்யூ., குணசேகரன்: டி.என்.பி.சி., குரூப் - 1, தேர்வு எழுதுவோருக்கான வயது வரம்பை, 45 ஆக உயர்த்த வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கான மதிப்பெண்ணை, இட ஒதுக்கீடு அடிப்படையில், மாற்றி அமைக்க வேண்டும். 

அமைச்சர் பழனியப்பன்: மத்திய அரசு, கட்டாய கல்வி சட்டத்தை அறிமுகப்படுத்தியபோது, ஆசிரியர் தேர்வு எப்படி இருக்க வேண்டும் என, சில விதிகளை வகுத்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு நடத்தப்படுகிறது. ஆசிரியர் தேர்வில், ஒருவர் குறைந்தது, 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்பது விதி. அதன் அடிப்படையில், தமிழகத்தில், 150 மதிப்பெண்களுக்கு, தேர்வு நடத்தப்பட்டு, தேர்ச்சி பெற, 90 மதிப்பெண் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான மதிப்பெண்களை, மாநில அரசு விரும்பினால் குறைக்கலாம். ஆனால், குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களை, ஆசிரியர்களாக தேர்வு செய்தால், குழந்தைகளின் கல்வித்தரம் பாதிக்கப்படும். எனவே, மதிப்பெண் குறைக்கப்படவில்லை. அதற்கு பதிலாக, முதல்வர் உத்தரவு படி, தோல்வி அடைந்தவர்களுக்காக, மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது. 

 மா.கம்யூ., பாலபாரதி: பட்டதாரி ஆசிரியர் தேர்வு முதலில் நடத்தப்பட்டபோது, 90 மதிப்பெண் பெற்றவர்கள் தேர்ச்சி பெற்றனர். அடுத்து நடந்த தேர்வில், 96 மதிப்பெண் எடுத்தவர், தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'கட்ஆப்' மதிப்பெண், சீராக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அமைச்சர் பழனியப்பன் : தொடக்கக் கல்வி ஆசிரியர் தேர்வுக்கும், முதுகலை ஆசிரியர் தேர்வுக்கும் வித்தியாசம் உண்டு. தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு, தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. முதுகலை ஆசிரியர்களுக்கு, போட்டித் தேர்வு நடத்தப்படுகிறது. தொடக்கப் பள்ளி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், பணி மூப்பு அடிப்படையில், பணி அமர்த்தப்படுகின்றனர். முதுகலை ஆசிரியர் தேர்வில், அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு, வேலை வழங்கப்படுகிறது. மருத்துவம், பொறியியல் படிப்பிற்கு, 'கட் ஆப்' மதிப்பெண் நிர்ணயிக்கப்படுவது போல், முதுகலை ஆசிரியர் பணிக்கும், 'கட் ஆப்' மதிப்பெண், நிர்ணயம் செய்யப்படுகிறது. இவ்வாறு, விவாதம் நடந்தது.

Comments

Popular posts from this blog