உதவி பேராசிரியர் தேர்வுப்பணி நேர்மையாக நடக்குமா? இரண்டரை ஆண்டுகளுக்கு பின் டி.ஆர்.பி., சுறுசுறுப்பு

 அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், சட்டசபையில் அறிவிக்கப்பட்ட, 1,093 உதவி பேராசிரியர் நியமனம், இரண்டரை ஆண்டு இழுபறிக்குப் பின், இப்போது, மீண்டும் சுறுசுறுப்பாக பணிகள் நடக்கின்றன. போட்டித்தேர்வு எதுவும் இல்லாமல், வெறும் அனுபவம் மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில், 1,093 பேரும் தேர்வு செய்யப்பட இருப்பதால், இந்த தேர்வு, நேர்மையாக நடக்குமா என, விண்ணப்பதாரர்கள் சந்தேகம் எழுப்பி உள்ளனர். 

 அரசு பள்ளி ஆசிரியர் அனைவரும், போட்டித்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். ஆனால், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், 1,093 உதவி பேராசிரியரை நியமனம் செய்யும் பணி மட்டும், நேர்முகத் தேர்வு அடிப்படையில் நடக்கிறது. முதுகலை பட்டத்துடன், தேசிய தகுதித் தேர்வு (நெட்) அல்லது மாநில தகுதித் தேர்வு (ஸ்லெட்) ஆகிய இரண்டில், ஏதாவது ஒரு தேர்வில் தகுதி பெற்றிருந்தால், உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். 

 இந்த பணிக்கு, 15 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அனுபவத்திற்கு, அதிகபட்சமாக, 15 மதிப்பெண்; அதிக கல்வித் தகுதிகளை கொண்டிருப்பவர்களுக்கு, அதிகபட்சமாக, ஒன்பது மதிப்பெண் என, 24 மதிப்பெண்களும், நேர்முகத்தேர்வுக்கு, 10 மதிப்பெண்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த, 34 மதிப்பெண் அடிப்படையில், தேர்வுப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, தகுதி வாய்ந்தவர்கள், தேர்வு செய்யப்படுவர்.

 இதில், அரசியல் ரீதியான அழுத்தங்கள் அதிகம் வரலாம் என்பதால், நேர்மையான முறையில், தேர்வு நடப்பது சந்தேகம் என, விண்ணப்பதாரர்கள் கூறுகின்றனர். ஏனெனில், அனுபவத்திற்கான அதிகபட்ச மதிப்பெண்களை பெற, தனியார் கல்லூரி நிர்வாகிகளிடம் பணம் கொடுத்து, "இத்தனை ஆண்டுகள் பணிபுரிந்தார்' என, சான்றிதழ் பெறுவதில் பெரிய பிரச்னை இருக்கப் போவதில்லை. 

அதேபோல்,நேர்முகத் தேர்வில், அதிகபட்ச மதிப்பெண்களை பெறுவதற்கான சூட்சுமத்தையும், அதிகார பின்புலம் கொண்டவர்களுக்கு, சொல்லி தெரிய வேண்டியதில்லை எனவும், விண்ணப்பதாரர்கள் புலம்புகின்றனர். இது போன்ற பிரச்னைகள் இருப்பதை உணர்ந்து தான், இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக, தேர்வுப்பணியை, டி.ஆர்.பி., கிடப்பில் போட்டது. 

டி.ஆர்.பி., முன்னாள் தலைவர், சவுத்ரி, "தற்போதைய தேர்வு முறையில், உதவி பேராசிரியரை தேர்வு செய்வது சரியாக இருக்காது; போட்டித் தேர்வு மூலமே தேர்வு செய்ய வேண்டும்' என, பலமுறை, சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவித்ததாக, டி.ஆர்.பி.,வட்டாரங்கள் கூறுகின்றன.

ஆனால், பிடிவாதமாக, தற்போதைய முறையிலேயே, தேர்வுப் பணியை நடத்த வேண்டும் என, டி.ஆர்.பி.,க்கு, தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததன் காரணமாகவே, தற்போது, பணிகள் வேகம் எடுத்துள்ளன என்பதையும், டி.ஆர்.பி., வட்டாரங்கள் ஒப்புக்கொள்கின்றன. 

 இதன் காரணமாகவே, இரண்டரை ஆண்டுகளாக இழுபறியில் இருந்த தேர்வுப்பணி, இப்போது, மும்முரமாக நடந்து வருகின்றன. இதற்கிடையே, உதவி பேராசிரியர்பணிக்கு விண்ணப்பித்துள்ள, 15 ஆயிரம் பேருக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு பணி, சென்னையில், நேற்று துவங்கியது. 

நந்தனம், அரசு கலைக் கல்லூரி, அண்ணா சாலையில் உள்ள, காயிதே மில்லத் மகளிர் கல்லூரி மற்றும் லேடி வெலிங்டன் கல்லூரி என, மூன்று இடங்களிலும், சான்றிதழ் சரிபார்ப்பு துவங்கியது. தொடர்ந்து, இந்த வாரம் முழுவதும், இப்பணி நடக்கும் என, கூறப்படுகிறது. 

இரண்டாவது கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, டிச., முதல் வாரத்தில் நடக்கிறது. எப்படியாவது, வேலை வாங்கிவிட வேண்டும் என்ற நோக்கத்தில், வசதி படைத்த விண்ணப்பதாரர்களும், அரசியல் செல்வாக்கு உள்ள விண்ணப்பதாரர்களும், தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Comments

Popular posts from this blog