டிஇடி சான்று சரிபார்ப்பில் 300 பேர் ஆப்சென்ட் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட சான்று சரிபார்ப்பில் 300 பேர் கலந்துகொள்ளவில்லை.அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா என்று பட்டதாரிகள் எதிர்பார்த்துள்ளனர்.

அரசு பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான தகுதித் தேர்வு கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி ( தாள்1), 18ம் தேதி(தாள் 2) நடந்தது.இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வில் தாள் 1ல் 2 லட்சத்து 65 ஆயிரத்து 568, தாள் 2ல் 4 லட்சத்து 19 ஆயிரத்து 898 பேர் எழுதினர். 

இவற்றில் தாள் 1ல் 12 ஆயிரத்து 596 பேரும், தாள் 2ல் 18 ஆயிரம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த மாதம் 20ம் தேதி முதல் சான்று சரிபார்ப்பு மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டது. 27ம் தேதி முடிய வேண்டிய நிலையில், கடந்த முறை சான்று சரிபார்ப்பில் கலந்துகொள்ள முடியாதவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டது. 

 கடந்த முறை சான்று சரிபார்ப்பில் கடைபிடிக்கப்பட்ட வெயிட்டேஜ் மதிப்பெண் போடும் முறையில் செமஸ்டர் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றதற்கான மதிப்பெண் பட்டியல்களும் தேவை என முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் அது தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டது. முதலில் டிஆர்டி அறிவித்தபடி மதிப்பெண் பட்டியல்களை பெறுவதற்காக அலைந்ததால் பலரால் சான்று சரிபார்ப்பில் பங்கேற்க முடியாமல் போனது. பலர் அதிக செலவு செய்து மதிப்பெண் பட்டியல்கள் வாங்கி வந்தனர். அதற்கு பிறகு அந்த மதிப்பெண் பட்டியல் தேவையில்லை. கன்சாலிடேட் மதிப்பெண் பட்டியல் இருந்தால் போதும் என்று அறிவித்தனர். 

இது தவிர வெளியூரில் இருந்தவர்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் என பலர் இந்த சான்று சரிபார்ப்பில் கலந்துகொள்ள முடியாமல் போனது. இப்படி 300பேர் சான்று சரிபார்ப்பில் கலந்து கொள்ளவில்லை என்று தெரிகிறது. அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று பட்டதாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர். 

 இதற்கிடையே, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிக்கு நிர்ணயிக்கப்பட்ட 60 சதவீத(150க்கு 90 மதிப்பெண்கள்) மதிப்பெண் என்பது எஸ்சி, எஸ்டி, எம்பிசி, பிசி உள்ளிட்ட பிரிவினருக்கு 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக அரசு நேற்று அறிவித்துள்ளது.இதன்படி ஆசிரியர் தகுதித் தேர்வில் 55 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக கருத முடியும். 

இதையடுத்து, கடந்த ஆண்டு தேர்விலும், இந்த ஆண்டு நடந்த தேர்விலும் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்ற எஸ்சி,எஸ்டி, எம்பிசி, பிசி பிரிவினருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சான்று சரிபார்ப்புக்கான தேதியை ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் அறிவிக்க வேண்டும் என்றும் பட்டதாரிகள் எதிர்பார்த்துள்ளனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண்கள் குறைக்கப்பட்டதன் அடிப்படையில் எத்தனை பேர் தேர்ச்சி பெறுவார்கள் என்ற புள்ளிவிவரம் இனிமேல் தான் தெரியும். அவர்களுக்கு வேண்டிய காலி பணியிடங்கள் இருக்குமா என்பதும் இனிமேல்தான் தெரிய வரும்.

Comments

Popular posts from this blog