ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் தளர்வுக்கு மாற்றுத் திறனாளிகள் ஆணையம் தலையிட கோரிக்கை. ஆசிரியர் தகுதி தேர்வில் கல்வித் துறை அரசாணையின்படி மதிப்பெண் தளர்வு வழங்க தாழ்த்தப்பட்டோர் ஆணையம் போன்று மாற்றுத் திறனாளி ஆணையமும் தலையிடவேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் வலியுறுத்தியுள்ளது. மாற்றுத் திறனாளி நல மாநில ஆணையர் மு.மணிவாசனிடம் சங்கத்தின் தலைவர் பா.ஜான்சிராணி, செயலாளர் எஸ்.நம்புராஜன் ஆகியோர் கோரிக்கை மனுவை வியாழனன்று வழங்கினர்.2009 ஆம் ஆண்டு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி ஆசிரியர் பணிகளுக்கு தகுதி தேர்வு நடத்தி நியமிக்கப்பட வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில்,மாற்றுத்திறனாளி உள்ளிட்டோருக்கு இட ஒதுக்கீட்டு கொள்கையை அமல்படுத்துவதில் பாதிப்பு ஏற்படாத வகையில் அந்தந்த பள்ளி நிர்வாகங்கள் மதிப்பெண் தளர்வு வழங்கலாம் எனதேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் வழிகாட்டு நெறிமுறை அளித்துள்ளது. இந்த வழிகாட்டு நெறிமுறைகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தமிழக கல்வித்துறை அரசாணை(எண்.181) வெளியிடப்பட்டது.எனினும், இந்த அரசாணை விதிகள் பின்பற்றப்படாமலேயே ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வுகள் நடத்தப்பட்டு பணி நியமனங்கள் வழங்கப்பட்டன. இதனால், மாற்றுத்திறனாளிகளுக்கான 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படாமலேயே நீடிக்கிறது. இது மாற்றுத்திறனாளி சட்டத்திற்கு எதிரானது என்பதை சங்கம் சுட்டிக்காட்டுவதோடு, தகுதித் தேர்வுகளில் மதிப்பெண் தளர்வு வழங்கவும் சட்டப்படியான 3 சதவீத இட ஒதுக்கீட்டையும் அளிக்க தமிழக அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதே கோரிக்கைகளுக்காக பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளும் போராட்டம் நடத்தியதால், பள்ளிக் கல்வித்துறை தனியான தகுதித் தேர்வுநடத்தவும், அதற்கு பயிற்சியளிக்கவும் உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டது. தனியான சிறப்புத் தேர்வு மற்றும் பயிற்சி வழங்கும் அரசின் முயற்சியை எமது சங்கம் வரவேற்கிறது. எனினும், தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் வழிகாட்டுதல்படியும் தமிழக கல்வித்துறையின் அரசாணைப்படியும் மதிப்பெண் தளர்வும் வழங்க வேண்டும் என்பதே மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையாகும். தமிழக கல்வித்துறை அரசாணையை அமல்படுத்தி, மதிப்பெண் தளர்வு வழங்கி, இட ஒதுக்கீட்டை உத்தரவாதப்படுத்தச் சொல்லி தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம் பள்ளிக் கல்வித் துறை மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கும் சமீபத்தில் கடிதம் எழுதியுள்ளது. எனவே, தாழ்த்தப்பட்டோர் தேசிய ஆணைத்தைப் போல மாற்றுத்திறனாளி ஆணையகமும் இந்த விஷயத்தில் தலையிட வேண்டும். தமிழ்நாடு ஆசிரியர் தேர்வுவாரியம் நடத்துகிற ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு மதிப்பெண் தளர்வு வழங்கவும் 3 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தவும்தகுந்த உத்தரவை தாங்கள் பிறப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

Comments

Popular posts from this blog