TET - ஆசிரியர் பணி நியமனம் தாமதமாகும், புதிய நியமனம் ஜூன் மாதம் நடைபெறும் 

ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் குறைப்பதில் அரசு எடுத்த தாமத முடிவால் தேர்ச்சி பெற்றவர்கள் பணி நியமனமும் தாமதமாகும். பிளஸ்2 பொதுத் தேர்வு முடிந்த பின்னர் சான்றிதழ் சரிப்பார்ப்பு நடக்கும். அதன் பின்னர் வெயிட்டேஜ் மதிப்பெண் நிர்ணயித்து ஜூன் மாதம் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

இதனால் அரசு வேலை நம்பி வேலை வாய்ப்பை இழந்த ஆசிரியர்கள் அல்லாடி வருகின்றனர். இந்த முறை நடைபெற்ற தேர்விலும் பல குளறுபடிகள் ஏற்பட்டது. குறிப்பாக வினாத்தாளில் பல தவறுகள் இருந்தன. இதனால் பலர் வழக்கு தொடர்ந்தனர். எனவே தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. 

இந்த பிரச்சனைகளை கடந்து ரிசல்ட் வெளியானது. வழக்கமாக ரிசல்ட் வெளியான சில மாதங்களில் பணி நியமனம் வழங்கப்படும். ஆனால் இந்த முறை ரிசல்ட் வெளியான பின்னர் பலர் வழக்கு தொடர்ந்தனர். இதனால் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் பாதித்தது. இதற்கிடையில் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண்ணை இடஒதுக்கீட்டு அடிப்படையில் குறைக்க வேண்டும் என்று பல அமைப்புகள் அரசை வலியுறுத்தியது.

இது தொடர்பாக தேர்வு வாரியம், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதாவுக்கு பரிந்துரைத்தது. ஆனால், அதை அவர் ஏற்கவில்லை. தகுதியை மட்டும் பார்க்க வேண்டும். இதில் இடஒதுக்கீடு முறை கூடாது. மதிப்பெண் குறைப்பு இல்லை என்பதில் கண்டிப்புடன் இருந்தார். இதனால் 90 மதிப்பெண் பெற்ற 25 ஆயிரம் பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி முடிக்கப்பட்டது. அவர்களுக்கு பணி நியமனம் செய்யப்பட இருந்தது. 

இந்த நிலையில் கடைசி கட்டத்தில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இந்த பிரச்சனையில் தலையிட்டது. இடஒதுக்கீட்டு அடிப்படையில் மதிப்பெண் குறைக்கப்பட வேண்டும். இல்லையென்றால் வன்கொடுமை சட்டம் பாயும் என்று எச்சரித்தது. இது அரசுக்கு நெருக்கடியை தந்தது. இதனால் 5சதவீத மதிப்பெண் குறைப்பை முதல்வர் அறிவித்தார்.

 இதனால் இப்பொழுது நிலைமை மாறிவிட்டது. அதாவது 90 மதிப்பெண் பெற்று 25ஆயிரம் பேரும், இப்போது 82 மதிப்பெண்ணாக குறைத்துள்ளதால் கூடுதலாக 45 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதிதாக தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்க வேண்டும். இப்பணியில் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர்கள் ஈடுபடுவார்கள்.இப்போது அவர்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 இது குறித்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மார்ச் 3ம் தேதி பொதுத் தேர்வு தொடங்குகிறது. இந்த பணிக்கு முன்பாக பல ஆய்வு கூட்டம் நடக்கும். இதற்கு துறையின் இணை இயக்குனர்கள் இருக்க வேண்டும். எனவே தேர்வு முடியும் வரையில் சான்றிதழ் சரிபார்க்க முடியாது. பிளஸ்2 தேர்வு முடிந்ததும் மார்ச் மாத இறுதியில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடங்கும். எப்படியும் 10 நாட்களுக்கு மேல் இப்பணி நடக்கும். 

ஏப்ரல் மாதம் வெயிட்டேஜ் மதிப்பெண் பார்க்கப்படும். அதன் பின்னர் லோக்சபா பொதுத் தேர்தல் இருப்பதால், அடுத்த கல்வியாண்டில், அதாவது ஜுன் மாதம் தான் பணி நியமனம் செய்யப்படுவார்கள். இவாறு அவர் கூறினார்.

Comments

Popular posts from this blog