12 லட்சம் பேர் எழுதிய குரூப்–4 தேர்வு முடிவு வெளியீடு மதிப்பெண் அடிப்படையில் ரேங்க் தெரிந்து கொள்ளலாம்.

 12 லட்சம் பேர் எழுதிய குரூப்–4 தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. அது மட்டுமல்லாமல் ஒவ்வொருவரும் தேர்வில் எடுத்த மதிப்பெண் விவரமும், மதிப்பெண் அடிப்படையில் அவர்களின் ரேங்க் விவரமும் வெளியிடப்பட்டுள்ளது.முதல் முதலாக இந்த முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:– 12 லட்சம் பேர் எழுதினார்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் 2013–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 25–ந்தேதி குரூப்–4 தேர்வை நடத்தியது. இந்த தேர்வு இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரித்தண்டலர், நில அளவர் ஆகிய பதவிகளுக்கு 5,855 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட இந்த தேர்வை 12 லட்சத்து 22 ஆயிரத்து 272 பேர் எழுதினார்கள். 

தேர்வின் விடைத்தாள் சரியாக மதிப்பீடு செய்யப்பட்டு பல முறை சரிபார்க்கப்பட்டு முடிவு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய( www.tnpsc.gov.in)இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 300 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடத்தப்பட்டது. தேர்வில் 90 மதிப்பெண்ணுக்கு அதிகமாக 11 லட்சத்து 50 ஆயிரத்து 47 பேர் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் அவர்கள் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் பொது ரேங்க் வெளியிடப்பட்டுள்ளது. 

மேலும் சாதி அடிப்படையிலும் ரேங்க் வெளியிடப்பட்டுள்ளது. ரேங்க் தெரிந்து கொள்ளலாம் இவர்களில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு வேலை கிடைக்கும். அதிக மதிப்பெண் பெற்றிருந்தாலும் அவர்கள் சான்றிதழ் சரியாக வைத்திருக்கிறார்களா? என்று வருகிற 24–ந்தேதி முதல் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் சரிபார்க்கப்படும். 

சான்றிதழ் சரிபார்க்கப்படும் தேதி விவரம் இணைய தளத்தில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக தெரிவிக்கப்பட உள்ளது. அவர்களின் பதிவு எண் மற்றும் பிறந்தநாளை குறிப்பிட்டு எங்கள் இணையதளத்தில் பார்த்தால் முடிவு, அனைத்து விவரங்களும் தெரியும். சான்றிதழ் சரிபார்த்த மறுநாள் கலந்தாய்வு நடத்தப்படும். 

ரேங்க் அடிப்படையில் அவர்களுக்கு வேலை கிடைப்பது தெரிந்துவிடும். பணியில் சேர இன்னும் 3 மாதங்கள் ஆகலாம். விடைத்தாள்கள் சரியாக ஒளிவு மறைவின்றி மதிப்பீடு செய்யப்பட்டு 100 சதவீதம் சரியான வழியில் முடிவு வெளியிடப்பட்டுள்ளது. அனைவரின் விடைத்தாள்களும் ஸ்கேன் செய்யப்பட்டு தேர்வர்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலகத்திற்கு பார்க்கும் வகையில் வழி செய்யப்படும். இந்த வசதி எல்லோரும் பணியில் சேர்ந்த பின்னர் தான் செய்து தரப்படும். 

குரூப்–2 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் குரூப் –1 தேர்வு முடிவு விரைவில் வெளியிடப்படும். அதற்கான பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. குரூப்–2 தேர்வுக்கு இதுவரை 6 லட்சத்து 5 ஆயிரத்து 96 பேர் விண்ணப்பித்துள்ளனர். மே மாதம் 18–ந்தேதி திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும். 

இப்போது குரூப்–4 தேர்வு முடிவு வெளியிட்டது எந்த வகையிலும் தேர்தல் நடத்தைவிதிக்கு எதிரானது அல்ல. இந்த தேர்வின் தொடக்க பணி முன்பே தொடங்கிவிட்டது. இவ்வாறு ஏ.நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார். பேட்டியின் போது தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய செயலாளர் விஜயகுமார், தேர்வு கட்டுப்பாட்டாளர் ஷோபனா ஆகியோர் உடன் இருந்தனர்.

Comments

Popular posts from this blog