பட்டதாரி ஆசிரியர் நியமனம்: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 43 ஆயிரம் பேரின் "வெயிட்டேஜ்' மதிப்பெண் வெளியீடு

பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள், சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற 43 ஆயிரத்து 242 பேரின் வெயிட்டேஜ் மதிப்பெண் விவரத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது. இவர்களிலிருந்து வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் 10 ஆயிரத்து 726 பேர் கொண்ட பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் ஜூலை 30-ஆம் தேதி வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. 

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இந்த மதிப்பெண் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த 2013 ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இந்தத் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகைக்குப் பிறகு மொத்தம் 72 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றனர். 

இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த ஜனவரி, மார்ச் மாதங்களில் நடைபெற்றது. மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு மே 21-ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் 4 ஆயிரம் பேர் பங்கேற்ற இந்தத் தேர்வில் 935 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கும் அண்மையில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. 

சான்றிதழ் சரிபார்ப்பு முடிவடைந்த நிலையில் நீதிமன்ற வழக்குகள் காரணமாக வெயிட்டேஜ் மதிப்பெண் மற்றும் தேர்வுப் பட்டியல் வெளியிடுவது தாமதமானது. நீதிமன்ற வழக்குகள் முடிவுக்கு வந்ததையடுத்து இப்போது ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள், சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற 43 ஆயிரம் பேரின் வெயிட்டேஜ் மதிப்பெண் வெளியிடப்பட்டுள்ளது. 

இடைநிலை ஆசிரியர்களுக்குரிய ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் தேர்ச்சி பெற்ற சுமார் 30 ஆயிரம் பேரின் வெயிட்டேஜ் மதிப்பெண் விவரம் விரைவில் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. 

தனியே விண்ணப்பிக்கத் தேவையில்லை: தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்ப்பின் போது அரசுப் பணியில் சேர விருப்பம் தெரிவித்திருந்ததையே, பட்டதாரி ஆசிரியர் பணியில் சேருவதற்கான விண்ணப்பமாக ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்றுக்கொள்கிறது. எனவே, இந்தப் பணிகளுக்காக தனியே விண்ணப்பிக்க வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

வெயிட்டேஜ் மதிப்பெண் முறை: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வெயிட்டேஜ் மதிப்பெண் முறை கடைப்பிடிக்கப்படுகிறது. 

இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 15 மதிப்பெண்ணும், தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான டிப்ளமோ தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 25 மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 60 மதிப்பெண்ணும் வெயிட்டேஜ் மதிப்பெண்ணாக வழங்கப்படுகிறது. இதில் மொத்தம் 100 வெயிட்டேஜ் மதிப்பெண்ணுக்கு தேர்வர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர். 

அதேபோல், பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 10 மதிப்பெண்ணும், பட்டப் படிப்பு தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 15 மதிப்பெண்ணும், பி.எட். தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 15 மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 60 மதிப்பெண்ணும் வெயிட்டேஜ் மதிப்பெண்ணாக வழங்கப்படும். இதில் மொத்தம் 100 வெயிட்டேஜ் மதிப்பெண்ணுக்கு தேர்வர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் நியமனம் இருக்கும். 

கூடுதலாகத் தேர்ச்சி பெற்றவர்களின் நிலை என்ன?... ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளில் மொத்தம் 42 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் சுமார் 11 ஆயிரம் பேர் ஜூலை இறுதியில் தேர்வு செய்யப்பட உள்ளனர். 

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மீதமுள்ள 31 ஆயிரம் பேரின் நிலை என்ன, அவர்களுக்கு அடுத்து வரும் பணி நியமனங்களில் முன்னுரிமை வழங்கப்படுமா என்பது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் கூறியது: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசுப் பள்ளிகளில் பணி நியமனம் கிடைக்கப் பெறாதவர்கள் தனியார் பள்ளிகளில் வேலைக்குச் செல்லலாம். அவர்களுக்கு அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தங்களது மதிப்பெண்ணை அதிகரித்துக்கொள்ளவும், ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கவும் வாய்ப்பு வழங்கப்படும். ஆனால், அவர்களுக்கு அடுத்து வரும் பணி நியமனங்களில் முன்னுரிமை எதுவும் வழங்கப்படாது என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 

பாட வாரியாக காலிப் பணியிடங்கள் வரலாறு பாடத்தில் அதிகளவாக 3,592 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பிறகு, ஆங்கில பாடத்தில் 2,822 பணியிடங்கள் காலியாக உள்ளன. பாட வாரியாக காலிப்பணியிடங்கள் விவரம்: 

தமிழ் - 772 
ஆங்கிலம் - 2822 
கணிதம் - 911 
இயற்பியல் - 605 
வேதியியல் - 605 
தாவரவியல் - 260 
விலங்கியல் - 260 
வரலாறு - 3592 
புவியியல் - 899 
மொத்தம் 10,726 பள்ளிக் கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறை காலிப்பணியிடங்கள் மட்டுமே இங்கே வழங்கப்பட்டுள்ளன. 

சிறுபான்மை மொழி பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட இதர துறைகளின் கீழ் இயங்கும் பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog