உதவிப் பேராசிரியர் நியமனம்: சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்களுக்கு மற்றுமொரு வாய்ப்பு - தினமணி

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் நேரடி உதவிப் பேராசிரியர் பணி நியமனத்துக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்களுக்கு மற்றுமொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, தொலைநிலைக் கல்வி வாயிலாக எம்.பில். பட்டம் பெற்றவர்கள், பி.எட்., எம்.எட். கல்வியியல் கல்லூரிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்கள் சென்னை காயிதே மில்லத் மகளிர் கல்லூரியில் திங்கள்கிழமை (ஜூலை 7) நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணி நியமனத்துக்கான சான்றிதழ் சரிபார்ப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் 2013-ஆம் ஆண்டு நவம்பரில் நடத்தியது. அதற்கான மதிப்பெண்களும் வெளியிடப்பட்டன. இந்த நிலையில், பி.எட். மற்றும் எம்.எட். கல்வியியல் கல்லூரி பணி அனுபவத்தை கணக்கில் கொள்ளவும், எம்.பில். பட்டத்தை 3-4-2009 தேதிக்கு முன்பாக தொலைநிலைக் கல்வி வாயிலாக பெற்றவர்களின் பணி அனுபவத்தைக் கணக்கில் கொள்ளவும் ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்தது. 

அதன்படி, சென்னை அண்ணாசாலையில் உள்ள காயிதே மில்லத் மகளிர் கல்லூரியில் ஜூலை 1 முதல் 4-ஆம் தேதி வரை அவர்களுக்கு கூடுதல் சான்றிதழ் சரிபார்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பங்கேற்க முடியாதவர்களுக்கு மற்றுமொரு வாய்ப்பாக திங்கள்கிழமையும் சான்றிதழ் சரிபார்ப்பில் அவர்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog