அரசுப்பள்ளிகளில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை கல்வித்துறை இயக்குனர் நாளை ஆலோசனை

 டிஇடி தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாய்ப்பு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை சேர்ப்பதற்காக அரசுப் பள்ளிகளில் பாடவாரியாக உள்ள காலி இடங்களின் எண்ணிக்கை குறித்த முக்கிய ஆலோசனை கூட்டம் சென்னையில் நாளை நடக்கிறது. 

தமிழக அரசுப்பள்ளிகளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. காலாண்டுத் தேர்வு தொடங்க உள்ள நிலையில் சில அரசுப்பள்ளிகளில் முக்கிய பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லாததால் பாடம் நடத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் பொதுத்தேர்வை சந்திக்க உள்ள 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

எனவே காலி பணியிடங்களை நிரப்பும் பொருட்டு சமீபத்தில் நடந்த டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்று இறுதி பட்டியலில் இடம் பிடித்தவர்களை ஆசிரியர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் பாடவாரியாக கணக்குகெடுக்கப்பட்டு இறுதி பட்டியல் தயாரிக்கப்படுகிறது. 

இது தொடர்பான ஆய்வு கூட்டம் பள்ளிக் கல்வி இயக்குனர் தலைமையில் சென்னையில் நாளை (26ம் தேதி) நடக்கிறது. முதன்மைக் கல்வி அதிகாரிகளின் நேர்முக உதவியாளர்கள், அலுவலக கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். 

அப்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் உடனடியாக நிரப்ப வேண்டிய பணியிடங்கள் குறித்து கணக்கெடுக்கப்படுகிறது. இந்த நியமன நடவடிக்கையின் போது துறை தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும் ஆய்வுக்கு எடுக்கப்பட உள்ளது. 

மேலும் தரம் உயர்த்தப்படும் பள்ளிகள், இவற்றுக்கு தேவையான கூடுதல் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் குறித்த விவரங்களும் இக்கூட்டத்தில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது. எனவே விரைவில் புதிய ஆசிரியர்கள் நியமிப்பதற்கான உத்தரவு தகுதியானவர்களுக்கு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog