வெயிட்டேஜ்’ முறைக்கு எதிர்ப்பு: சென்னையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 210 பட்டதாரி ஆசிரியர்கள் கைது- தினதந்தி 

ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்யக்கோரி சென்னையில் உள்ள மாநில தேர்தல் ஆணையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரி ஆசிரியர்கள் 210 பேர் கைது செய்யப்பட்டனர். பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம் ‘வெயிட்டேஜ்’ முறையை ரத்து செய்யக்கோரி கடந்த 25 நாட்களுக்கும் மேலாக இடைநிலை ஆசிரியர்கள் - பட்டதாரி ஆசிரியர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்தநிலையில் சென்னை கோயம்பேடு பஸ் நிலையம் எதிரே உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் முன்பு நேற்று பட்டதாரி ஆசிரியர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும், தகுதித்தேர்வின் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்க வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி பட்டதாரி ஆசிரியர்கள் தொடர் கோஷமிட்டபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

தகுதித்தேர்வின் அடிப்படையிலேயே... இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரி ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், ‘‘ஆசிரியர் நியமனத்தில் ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண் முறை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். ஆசிரியர்கள் தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்பட வேண்டியவர்கள். எனவே நியாயமாக தகுதித்தேர்வு ஒன்றை நடத்தியே பணி நியமன ஆணை வழங்க வேண்டும். 

இந்த வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய வேண்டும். எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்’’, என்றனர். இந்த ஆர்ப்பாட்டம் குறித்து தகவலறிந்த மதுரவாயல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரி ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 

இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரி ஆசிரியர்கள் 84 பெண்கள் உள்பட 210 பேரையும் போலீசார் கைது செய்து மதுரவாயல் காவல் நிலையத்தில் அடைத்து வைத்தனர். பின்னர் மாலையில் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை செய்யப்பட்டவுடன், சுமார் 50 பேர் நேராக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். 

கோயம்பேட்டில் நடத்திய போராட்டத்தின்போது, போலீசார் அத்துமீறி தாக்குதல் நடத்தினார்கள் என்றும், படித்த பட்டதாரி ஆசிரியர்களைப் போல போலீசார் தங்களை மரியாதையுடன் நடத்தவில்லை என்றும் புகார் கூறினார்கள். பின்னர் கமிஷனர் அலுவலகத்தில், கோரிக்கை மனு ஒன்றை கொடுத்து விட்டு கலைந்து சென்றனர். கோரிக்கை மனுவில், தாக்குதல் நடத்திய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று தெரிவித்து இருந்தனர்.

Comments

Popular posts from this blog