2 ஆண்டுகளில் பொதுத்துறை நிறுவனங்களில் 2.5 லட்சம் காலியிடம்’!!! ‘இன்னும் இரு ஆண்டுகளில், அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் இரண்டரை லட்சம் பணியிடங்கள் காலியாகப் போகின்றன’ என, இலவச பயிற்சி முகாமில் தெரிவிக்கப்பட்டது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், ‘பாரதி கல்வி, வேலை வாய்ப்பு’ இலவச பயிற்சி மைய துவக்க விழா, ஊட்டி ஹில்பங்க் சந்திப்பில் உள்ள சி.ஐ.டி.யு., அலுவலகத்தில், நடந்தது. இந்த மையத்தில், பிரதி ஞாயிறு கிழமைகளில், காலை முதல் மதியம் வரை, தகுதி வாய்ந்த பயிற்றுனர்கள் மூலம், வங்கித் தேர்வு, டி.என்.பி.எஸ்.சி., ஆசிரியர் தகுதி தேர்வு, வி.ஏ.ஓ., உட்பட அனைத்து அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயிற்சியை துவக்கி வைத்து, பயிற்சி மைய மாநில ஒருங்கிணைப்பாளர் கணேஷ், இந்திய வங்கி ஊழியர் சம்மேளன இணை செயலர் மகேஷ்வரன் ஆகியோர் கூறியதாவது: பலருக்கு, அரசுப் பணி என்பது, கானல் நீர் தான். அரசுப் பணிக்கான போட்டி தேர்வுக்கு இளைஞர்களை தயார்படுத்த, பயிற்சி வகுப்பு என்ற பெயரில் பெரும் தொகையை கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளது. ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு இது சாத்தியமில்லை என்ற நிலையில், மாநிலம் முழுக்க, 30 இலவச பயிற்சி மையங்களை ஏற்படுத்தி, போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் முறை குறித்து, இலவச பயிற்சி வழங்கி வருகிறோம். குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு துறைகள், வங்கி உட்பட பொதுத் துறை நிறுவனங்களில், வெளியூரைச் சேர்ந்தவர்களே அதிகளவில் பணிபுரிகின்றனர்; நீலகிரி மாவட்ட இளைஞர்களுக்கு அரசுப்பணி எளிதாக கிடைப்பதில்லை. மாநில அரசு துறைகள் மற்றும் வங்கி உட்பட பொதுத் துறை நிறுவனங்களில், அடுத்த இரு ஆண்டுகளில், 2.50 லட்சம் பேர் பணி ஓய்வு பெறவுள்ளனர்; காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எனவே, ஊட்டியில் நடக்கும் இலவச பயிற்சி மையத்தில், அதிகளவு இளைஞர்கள், இளம் பெண்கள் பயிற்சி பெற்று, அரசுப் பணியை பெற வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Comments

Popular posts from this blog