அங்கன்வாடி ஊழியர்கள் நியமனத்துக்கு தடை - மதுரை ஐகோர்ட் தமிழகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் நியமனத்திற்கு, மதுரை ஐகோர்ட் கிளை இடைக்காலத் தடை விதித்தது. திருமங்கலம் எம்.புளியங்குளம் மீனாலட்சுமி தாக்கல் செய்த மனு: சமூக நலத்துறை சார்பில், அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் காலியிடங்களை நிரப்ப, அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனடிப்படையில் கலெக்டர்கள், திட்ட அலுவலர்கள் நியமன நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 2013 ஆக., 28ல் அரசு உத்தரவில், 'மாவட்ட வாரியாக, நேர்காணல் மூலம் மட்டுமே பணி நியமனம் மேற்கொள்ள வேண்டும்' என, உள்ளது. தற்போதைய பணி நியமன நடைமுறையில், மாவட்டந்தோறும் எத்தனை பணியாளர்கள் நியமிக்க உள்ளனர்; இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படுமா என்ற விவரங்களை தெளிவுபடுத்தவில்லை. நேர்காணலுக்கு முன்பே யார் யாரை நியமிப்பது என, அரசியல்வாதிகள் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. அங்கன்வாடி பணியிடங்களை பொது அறிவிப்பின்றி, நேர்காணல், வசிப்பிடம் அடிப்படையில் தேர்வு செய்வது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. பொது அறிவிப்பு வெளியிடாமல், இடஒதுக்கீடு பின்பற்றாமல் அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்களை நியமனம் செய்ய தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டிருந்தார். நீதிபதி டி.ராஜா முன், மனு விசாரணைக்கு வந்தது. அரசு கூடுதல் வழக்கறி ஞர் முகமது முகைதீன், 'அரசாணைப்படி பொது அறிவிப்பு வெளியிடத் தேவையில்லை. தற்போது மாவட்ட அளவில் தான் நியமனம் மேற்கொள்ளப்படுகிறது. மாநிலம் முழுவதும் நியமனத்திற்கு தடை கோர முடியாது' என்றார். பணி நியமனம் மேற்கொள்ள தடை விதித்த நீதிபதி, சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை செயலர், சமூக நலத்துறை கமிஷனருக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டார்.

Comments

Popular posts from this blog