Special Article : வெறும் பாடங்களை போதிப்பதற்காகவா ஆசிரியர்?  

சென்னையில், ஒரு பள்ளி வளாகத்தில், ஆசிரியர் ஒருவர் அடி வாங்கியதைப் பார்த்து, அதிர்ந்து விட்டேன். மாணவர் ஒருவர், பள்ளியில் விசில் அடித்ததை கண்டித்ததற்காக, அவருக்கு இந்த பரிசு. இது, கொடுமையின் உச்ச கட்டம்!சில ஆண்டுகளுக்கு முன், வகுப்பறையில் ஆசிரியை ஒருவர், மாணவரால் குத்திக் கொல்லப்பட்டார். 

நம் சமுதாயம், எங்கே சென்று கொண்டிருக்கிறது! மாணவர்களுக்கு, வெறும் பாடங்களை போதிப்பதற்காகவா ஆசிரியர்? இதற்கு, கணினி மற்றும் சி.டி., போதுமே!தன்னிடம் பயிலும் ஒவ்வொரு மாணவருக்கும், ஒழுக்கத்தையும், நல்ல பண்பையும் எடுத்துச் சொல்பவர் தான் ஆசிரியர். அவருக்கு, மதிப்பு, மரியாதை தர வேண்டும்.

 மாணவர்களின் கேலிப்பொருளாக, பல் பிடுங்கப்பட்ட பாம்பாக, இன்றைய ஆசிரியர்கள் வலம் வருவது, நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும்.முன்னாள் மாணவர்கள், என் மீது பயமும், மரியாதையும் வைத்திருப்பதை, இன்றும் நான் உணர்கிறேன்; பெருமை அடைகிறேன். அது, நான் பாடம் நடத்தியதற்காக மட்டுமல்ல; என் கண்டிப்பும் முக்கிய காரணம்.மாணவர்கள், ஒழுக்கக்கேடான செயல்களை செய்யும்போது, அதைக் கண்டும் காணாமல் இருப்பவர் ஆசிரியரே அல்ல. ஆசு + இரியர் = ஆசிரியர்; குற்றங்களை களைபவர் என்று பொருள்

.இன்றைக்கு, ஆசிரியர் என்பவர், வெறும் சம்பளத்தை மட்டும் பெற்று, வாய்மூடி இருக்க வேண்டுமென, சமுதாயம் எதிர்பார்க்கிறதா?பள்ளி வளாகத்தில், மாணவர், மாணவியை கேலி செய்வதையும், மாணவர் புகை பிடிப்பதையும், போதைப் பொருள் பயன்படுத்துவதையும், மொபைல் போனில் ஆபாசப் படம் பார்ப்பதையும், வகுப்பில் விசில் அடிப்பதையும் ஆசிரியர்கள் கண்டிக்கக் கூடாதா?

இந்த சமுதாயம், ஆசிரியர்களுக்கு உரிய பொறுப்பையும், அதிகாரத்தையும் வழங்க வேண்டும். மாணவர்கள், அதிகாரமற்ற ஆசிரியரை, பெஞ்ச் மேல் ஏற்றும், 'கலிகாலம்' வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை! Article by எல்.லட்சுமணன், தலைமை ஆசிரியர் (பணி நிறைவு), தேசிய நல்லாசிரியர், துளிதலை, நீலகிரி

Comments

Popular posts from this blog