தமிழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்டங்களில் ஆர்ப்பாட்டம், போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் எஸ்.சி., எஸ்.டி.,யில் 5 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு இடைநிலை ஆசிரியர்களாக பணியமர்த்தப்பட்டவர்களை, பணி நாள் முதல் பட்டதாரி ஆசிரியர்களாக பணி வழங்குதல், மத்திய-மாநில அரசு ஆசிரியர்களுக்கு சமமாக அனைத்துப் படிகளையும் அளித்தல், ஆதிதிராவிடப் பள்ளிகளில் பணிபுரியும் 12 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் வழங்குதல் என பல்வேறு நியாயமான கோரிக்கைகளை ஆசிரியர்கள் முன்வைக்கிறார்கள்.

இதுதொடர்பாக, அவர்கள் மேற்கொள்ள இருக்கும் ஆர்ப்பாட்டம், போராட்டம் போன்றவைகள் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு ஆசிரியர்களின் கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். எனவே, தமிழக அரசு தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் கல்வி பயிலும் மாணவர்களுக்கு போதிய ஆசிரியர்கள், இட வசதி, விளையாடும் இடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தியும், ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றியும் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments

Popular posts from this blog