போட்டித் தேர்வு மூலம் கல்லூரி பேராசிரியர் நியமனம் நடைபெற வேண்டும்: ஜி.கே.வாசன்

போட்டித் தேர்வின் மூலம் கலை- அறிவியல் கல்லூரிகளில் பேராசிரியர் நியமனம் நடைபெற வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் பல் மருத்துவக் கல்லூரி, மருத்துவக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், பேராசிரியர்கள் நியமனம் போட்டித் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் நடைபெறுகிறது.

ஆனால் பல்கலைக்கழகங்கள், கலை- அறிவியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் நேர்காணல் மூலம் மட்டுமே பேராசிரியர்கள் பணி நியமனம் நடைபெறுகிறது. அவ்வாறு நேர்காணல் நடைபெறும் போது தன்னிச்சையாக மதிப்பெண் வழங்கப்படுகிறது. அவற்றில் வெளிப்படைத்தன்மை இல்லை.

சுயநிதிக் கல்லூரிகள், பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் ஆகியவற்றில் பேராசிரியர் நியமனம் நடைபெறும்போது கல்வித் தகுதியை கருத்தில் கொண்டு பணியமர்த்தப்பட வேண்டும்.கல்லூரிகளில் பேராசிரியர் பணியிடங்கள் போட்டித் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் நடைபெறும்போது திறமையான பேராசிரியர்களை நியமிக்க முடியும். எனவே 2015-16-ஆம் கல்வி ஆண்டு வரை உள்ள பேராசிரியர்கள் காலிப் பணியிடங்களை போட்டித் தேர்வு நிரப்ப வேண்டும். திறமையின் அடிப்படையில், வெளிப்படையான, நம்பகத்தன்மையுடன் பணி நியமனம் வழங்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog