2016ம் ஆண்டில் டி.என்.பி.எஸ்.சி தேர்வு மூலம் 5013 பணியிடங்கள் நிரப்பப்படும்: அருள்மொழி
2016 ஆம் ஆண்டில் தமிழக அரசின் 33 துறைகளில் காலியாக உள்ள 5,513 பணியிடங்க‌ள் வரும் ஆண்டில் நிரப்பப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இந்த ஆண்டிற்கான திட்ட அறிக்கையை தேர்வாணையத்தின் தலைவர் கே.அருள்மொழி இன்று (ஜன.29) வெளியிட்டார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழக அரசின் 33 துறைகளில் காலியாக உள்ள 5,513 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு முதல்முறையாக சுற்றுலா வளர்ச்சித்துறையில் 5 அதிகாரி பணியிடத்தில் 5 காலியிடங்களும், எல்காட் நிறுவனத்தில் 12 துணை மேலாளர் பணியிடங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. குருப் 3 பிரிவில் நேர்காணல் இல்லாத பணியில் 36 பணியிடமும், குருப் 4 பிரிவில் 4,931 காலியிடங்கள் என 5,513 பணியிடங்கள் நிரப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய 9 தேர்வுகள் கனமழையின் காரணமாக தள்ளி வைக்கப்பட்டன. அவற்றிக்கான தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன. கடந்த அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி பதவி ஏற்றது முதல் 3 மாதங்களில் 12 தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டு, 6 ஆயிரத்து 54 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன என்று கூறினார்.

மேலும், இந்த ஆண்டு குருப் 1 பிரிவில் 29 துணை ஆட்சியர் பணியிடங்களும், 8 வணிகவரித்துறை உதவி ஆணையர், 5 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், 1 மாவட்டப் பதிவாளர் உட்பட 45 பணியிடங்களும், 65 உதவி சிறை அலுவலர் பணியிடமும், வட்டார சுகாதார புள்ளியியலாளர் பணியில் 172 பணியிடமும் நிரப்பப்பட உள்ளன.

இந்த ஆண்டிற்கான கிராம நிர்வாக அலுவலர், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளில் அடங்கிய குருப் 2 தேர்வில் நேர்காணல் மற்றும் நேர்காணல் அல்லாத பணிகள் என பல்வேறு காலியிட விவரங்கள் வர வேண்டி உள்ளது என்று கூறினார்.

மேலும், புதிய திட்ட அறிக்கையை விவரங்களை அறிய தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.net என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog