தேர்தல் பணிகளில் இருந்து ஆசிரியர்களை விடுவிப்பது குறித்து பரிசீலனை

 தேர்தல் பணிகள் உள்ளிட்ட கல்வி சாராத பணிகளில் இருந்து ஆசிரியர்களை விடுவிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் ராம் சங்கர் கட்டேரியா தெரிவித்தார்.

இதுகுறித்து அவர், குஜராத் மாநிலம், ஆமதாபாதில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது: தேர்தல் பணிகளிலும் மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணிகளிலும் பள்ளிக்கூட ஆசிரியர்களை ஈடுபடுத்தி வருகிறோம். பல்வேறு நலத் திட்டங்களை அமல்படுத்தும் பணிகளும் அவகளிடம் அளிக்கப்படுகின்றன. இதனால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

ஆசிரியர்களை மற்ற பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என மத்திய அரசும் விரும்புகிறது. அவர்கள் கல்வி போதிப்பதில் கவனம் செலுத்தினால் போதும். இதுதொடர்பாக, விரைவில் நல்லதொரு முடிவு எடுக்கப்படும் என்றார் ராம் சங்கர் கட்டேரியா.

தேர்தல் பணிகள், மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆகியவற்றில் பள்ளிக்கூட ஆசிரியர்களை ஈடுபடுத்துவது குறித்து பல ஆண்டுகளாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் கடந்த காலங்களில் உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது. தற்போது, ஆசிரியர்களை கல்வி சாராத பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என ஆசிரியர் கூட்டமைப்புகளும், பள்ளி நிர்வாகங்களும் மீண்டும் வலியுறுத்தி வருவது, குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog