எச்சரிக்கை எளிமையாக இருக்காது பொதுத்தேர்வு மாணவர்களுக்கு தேர்வுத்துறை எச்சரிக்கை

'மழை, வெள்ள பாதிப்பால், பிளஸ் 2, மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு வினாத்தாள் எளிமையாக இருக்கும் என எண்ண வேண்டாம்' என, தேர்வுத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

வெள்ள பாதிப்பு:
கடந்த ஆண்டு இறுதியில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலுார் மாவட்டங்களிலும், திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களின் சில பகுதிகளிலும் கடும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது; ஒரு மாதம் பள்ளிகள் இயங்கவில்லை. பாட புத்தகங்கள், நோட்டுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், மார்ச் 4ல், பிளஸ் 2, மற்றும் மார்ச் 15ல், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் துவங்குகின்றன. 'வெள்ள பாதிப்பால், பொதுத் தேர்வு வினாத்தாள்கள் எளிமையாக இருக்கும்' என, பெற்றோர், மாணவர்கள்மற்றும் சில பள்ளிக ளின் ஆசிரியர்களிடம் தகவல்கள் பரவுகின்றன.

இதுகுறித்து தேர்வுத்துறையில் விசாரித்த போது,'மழை, வெள்ள பாதிப்புக்கும் பொதுத் தேர்வுக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே, வினாத்தாள் எளிமையாக இருக்கும் என கருதி, மாணவர்கள் அசட்டையாக இருந்து விட வேண்டாம்' என, தெரிவித்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறியதாவது:பொதுத் தேர்வு, மார்ச்சில் நடக்க இருந்தாலும், அதற்கான வினாத்தாள்கள், 2015 செப்டம்பர் முதல், ரகசியகுழுவில் இடம் பெற்ற ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்டு, அக்டோபரில் இறுதிசெய்யப்பட்டு விட்டன. அதன் பின் தான் மழை, வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. எனவே, மழையையும், பொதுத் தேர்வையும் தொடர்புபடுத்தி வினாத்தாள் எளிதாக இருக்கும் என நினைக்க வேண்டாம்.

மாதிரி தேர்வு:
'இந்த ஆண்டு, வினாக்கள் பாட புத்தகத்தின் உள் பகுதியிலிருந்து கேட்கப்படும்' என, கல்வி ஆண்டு துவங்கும் போதே, மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன. அரசு பள்ளிகள், அந்த அடிப்படையில் தான், மாதிரி தேர்வுகளையும், திருப்புதல் தேர்வுகளையும் நடத்துகின்றன. அரையாண்டு தேர்விலும், வினாத்தாள் கடினமாகவே இருந்தது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Comments

Popular posts from this blog