அரசு பள்ளிகளில் காலியிடங்கள்: 1,250 சிறப்பாசிரியர்கள் நியமனம் எப்போது?- 2 ஆண்டு கடந்தும் நடவடிக்கை இல்லை

அரசு பள்ளிகளில் போட்டித்தேர்வு மூலமாக சிறப்பாசிரியர்களை நிய மிப்பது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டு கிட்டதட்ட 2 ஆண்டுகள் ஆகியும் இன்னும் காலியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளி களில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர்கள் பணியாற்றி வரு கிறார்கள். முன்பு இவர்கள் வேலை வாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு (சீனியாரிட்டி) மூலம் நியமிக்கப் பட்டு வந்தனர். ஆரம்பத்தில் மாவட்ட அளவிலான பதிவுமூப்பும், அதன்பிறகு மாநில பதிவுமூப்பும் பின்பற்றப்பட்டது.இந்த நிலையில், சிறப்பாசிரியர் களை பதிவுமூப்பு அடிப்படையில் நியமிக்கக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை கடந்த 9.6.2014 அன்று ஓர் உத்தர வைப் பிறப்பித்தது.

இந்த உத்தரவைத் தொடர்ந்து, சிறப்பாசிரி யர்களை போட்டித்தேர்வு மூலம் நியமிக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, எழுத்துத்தேர்வு நேர்முகத்தேர்வு அடிப்படையில் சிறப்பாசிரியர்களை நியமிக்கும் வகையில் கடந்த 17.11.2014 அன்று ஓர் அரசாணையை வெளியிட்டது. அதன்படி, தேர்வுக்கு மொத்தம் 100மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டது. அதில் 95 மதிப்பெண் எழுத்துத் தேர்வுக்கும். எஞ்சிய 5 மதிப்பெண், உயர் கல்வித்தகுதி, அனுபவம், என்சிசி, என்எஸ்எஸ் உள்ளிட்ட இதர செயல்பாடு ஆகியவற்றுக்கும் ஒதுக்கப்பட்டது.

இதற்கிடையே, சிறப்பாசிரியர் நேரடி நியமன அரசாணையை தொடர்ந்து, 440 உடற்கல்வி ஆசிரியர், 196 ஓவிய ஆசிரியர்,137 தையல் ஆசிரியர், 9 இசை ஆசிரியர் என மொத்தம் 782 சிறப்பாசிரியர் பணி காலியிடங்களை மாநில பதிவுமூப்பு அடிப்படையில் நியமிக்கும் வகையில் கடந்த 8.5.2013 அன்று வெளியிட்ட அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாபஸ் பெற்றது.

அந்த அறிவிப்பின் மூலம் நியமிக்கப்பட இருந்த 782 காலியிடங்கள் 2012-13-ம் கல்வி ஆண்டுக்கான காலியிடங்கள் ஆகும். அந்த காலியிடங்களையும் 2013-14, 2014-15, 2015-16 ஆகிய 3 கல்வி ஆண்டுகளில் உருவான காலியிடங்கள் என ஏறத்தாழ 1,250 இடங்களை நிரப்பும் வகையில் பள்ளிக்கல்வித்துறை காலியிடங்களின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைத்தது.

சிறப்பாசிரியர்களை போட்டித் தேர்வு மூலம் நியமிக்க அரசு முடிவெடுத்திருப்பதால் தையல், ஓவியம், இசை உள்ளிட்டபாடங்களில் தொழில்கல்வி ஆசிரியர் சான்றிதழ் (டிடிசி) பயிற்சி முடித்தவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு எப்போது வரும் என்று ஆவலுடன் காத்திருக்கிறார்கள். நேரடி நியமனம் தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டு கிட்டதட்ட 2 ஆண்டுகள் ஆகிவிட்ட தால் அவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இதற்கிடையே, அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் சுமார் 15 ஆயிரம் பகுதி நேரசிறப்பாசிரியர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்என்று அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர். வாரத்தில் 3 நாட்கள் மட்டும் பணியாற்றும் அவர்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.7 ஆயிரம் வழங்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog