புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு; 1-ந் தேதி முதல் ரேஷன் கடைகளில் வழங்க ஏற்பாடு

எலெக்ட்ரானிக் பதிவுகளின் அடிப்படையில் ஸ்மார்ட் ரே‌ஷன் 
அட்டைகளை வழங்கினால் போலி அட்டைகள் தானாக ஒழிந்துவிடும்
 என்று கணக்கிட்டு, ஸ்மார்ட் ரே‌ஷன் அட்டை வழங்கும் திட்டத்தை 
தமிழக அரசு அறிவித்தது.


அதன் பின்னர் ரே‌ஷன் அட்டைகளை ஆதார் தகவலுடன் இணைக்க 
முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரே‌ஷன் அட்டைகளுக்கான ஆதார் 
பதிவு தகவல்களும் பெறப்பட்டுவிட்டன.
99 சதவீதம் பதிவு
தமிழகம் முழுவதும் இதுவரை 99 சதவீத ஆதார் தகவல்கள் பெறப்பட்டு 
ரே‌ஷன் அட்டையுடன் இணைக்கப்பட்டுவிட்டன. ஒரு சதவீதம் மட்டுமே 
அதாவது தமிழகமெங்கும் சுமார் 2 லட்சம் பேர் மட்டுமே ஆதார் 
தகவல்களை இணைக்கவில்லை.
குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள், அவர்களின் ஆதார் எண்கள்
 மற்றும் செல்போன் எண் போன்ற தகவல்கள், அந்தந்த ரே‌ஷன் 
கடைகளில் கடந்த 6 மாதங்களாக இணைக்கப்பட்டு வந்தன. ரே‌ஷன் 
அட்டைதாரரின் புகைப்படங்களை ஸ்மார்ட் அட்டையுடன் இணைக்க 
அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டது. இதில் சற்று காலதாமதம் 
ஆகிவிட்டது.
இந்த நிலையில், ஏப்ரல் 1–ந் தேதியன்று ஸ்மார்ட் ரே‌ஷன் அட்டைகள் 
வழங்கும் பணியை தமிழக அரசு தொடங்குகிறது. திருவள்ளூர் 
மாவட்டம், கொரட்டூரில் காலை 11 மணிக்கு முதல்–அமைச்சர் 
எடப்பாடி கே.பழனிசாமி இந்தத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
அட்டை எப்படி இருக்கும்?
பச்சை வண்ணத்தில் உள்ள அந்த அட்டை ஏ.டி.எம். அட்டைபோல் 
காணப்படும். முதல் பக்கத்தில் தமிழக அரசின் முத்திரை, அட்டை 
வழங்கும் துறையின் பெயர் ஆகியவை இடம் பெற்றிருக்கும்.
மேலும் குடும்பத் தலைவரின் புகைப்படம், பெயர், பிறந்த தேதி, 
முகவரி, அட்டைக்கான எண் ஆகியவை இடம்பெற்றிருக்கும். 
அட்டையின் பின்பகுதியில், அந்தக் குடும்பத்தில் உள்ளவர்களின் 
ஆதார் எண், ‘கியூ ஆர் கோர்டு’ ஆகியவை இடம் பெற்றிருக்கும்.
அச்சுப் பணி தொடர்கிறது
இதுகுறித்து உணவுப் பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்புத்துறை 
அதிகாரி ஒருவர் கூறியதாவது:–
ரே‌ஷன் பொருட்களைப் பெறுவதில் ஒருவர் கூட விடுபட்டுவிடக்கூடாது 
என்ற முனைப்பில் அரசு செயல்பட்டு வருகிறது. ஸ்மார்ட் ரே‌ஷன் 
அட்டைகளை தொடர்ந்து அச்சிட்டு வருகிறோம்.
எஸ்.எம்.எஸ். வரும்
அச்சிட அச்சிட அவற்றை தொடர்ந்து வழங்குவோம். வாடிக்கையாளர் 
ஒருவரின் ஸ்மார்ட் ரே‌ஷன் அட்டை அச்சிடப்பட்டு, அது அவரது 
ரே‌ஷன் கடைக்கு வந்துவிட்டால், அதுபற்றிய தகவலும், அதை அவர் 
வந்து பெற்றுக்கொள்ளலாம் என்ற தகவலும், ரே‌ஷன் அட்டையுடன் 
ஏற்கனவே பதிவு செய்திருந்த செல்போனுக்கு தமிழ் மொழியில்
 எஸ்.எம்.எஸ். ஆக வரும்.
இந்த எஸ்.எம்.எஸ். வந்த பிறகு ரே‌ஷன் கடைக்குச்சென்று புதிய 
அட்டையை பெற்றுக்கொள்ளலாம். எனவே, யாரும் முன்கூட்டியே 
ரே‌ஷன் கடைகளுக்குச் சென்று அவசரப்படத் தேவையில்லை.
சரிபாருங்கள்
ஒவ்வொருவரும் தங்கள் செல்போன் எண் அந்தந்த ரே‌ஷன் கடையில் 
பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்வது மிகமிக 
அவசியம். செல்போன் நம்பரை நீங்கள் கொடுத்தும் அது பதிவு 
செய்யப்படவில்லை என்றால், ஸ்மார்ட் அட்டை வாங்குவதில் 
சுணக்கம் ஏற்படும்.
ஆனாலும் செல்போன் நம்பரை பதிவு செய்ய வேறு வழிகள் உள்ளன.
 1967 அல்லது 18004255901 என்ற இலவச நம்பர்களை தொடர்பு கொண்டு
 அந்த சேவையைப் பெறலாம். இ–சேவை மையங்களிலும் இதற்கான
 உதவியை நாடலாம்.
செல்போன் நம்பரை பதிவு செய்தபிறகு வாங்கிய பொருட்கள் 
தொடர்பாக இதுவரை எஸ்.எம்.எஸ். எதுவும் அந்த நம்பருக்கு வரவில்லை
 என்றால், அந்த நம்பர் பதிவாகவில்லை என்று அர்த்தம். எனவே 
இதை உடனே சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
சென்னையில் இல்லை
முதல் அட்டையை இலவசமாக வழங்குகிறோம். பின்னர் அந்த 
அட்டையில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமென்றாலும், 
இணையதளம் வழியாக சுயமாக செய்துகொள்ளலாம். இ–சேவை 
மையம் மூலமாகவும் மாற்றிக் கொள்ளலாம்.
ஆனால் தகவல்களை மாற்றிய பிறகு புதிய ஸ்மார்ட் அட்டையை 
அச்சிட்டு வழங்குவதற்கு கட்டணம் நிர்ணயிக்கப்படும். சென்னையில் 
தற்போது தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலாகி இருப்பதால், 
தேர்தல் நடவடிக்கைகள் முடியும்வரை ஸ்மார்ட் அட்டைகள் வழங்க 
இயலாது.
தொலைந்துவிட்டால்...
ரே‌ஷன் அட்டையுடன் ஆதார் நம்பரை இதுவரை இணைக்காமல்
 இருப்பவர்கள் சற்று துரிதமாக செயல்படவேண்டும். ஜூன் மாதத்துக்குள்
 ஆதார் எண்கள் இணைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு 
உத்தரவிட்டுள்ளது.
ஸ்மார்ட் அட்டையை யாரும் தொலைத்துவிட்டாலும் கவலைப்பட 
வேண்டாம். அட்டை எண், ஆதார் எண், ரே‌ஷன் அட்டையில் பதிவு 
செய்த செல்போன் எண் ஆகியவற்றை வைத்து புதிய அட்டையை 
பெற்றுக்கொள்ளலாம். ரே‌ஷன் பொருட்கள் வாங்காவிட்டால் அட்டை
 ரத்தாகிவிடும் என்ற பயமும் இனி அவசியம் இல்லை. ஸ்மார்ட் ரே‌ஷன் 
அட்டையை ரத்து செய்ய முடியாது.  இவ்வாறு அவர் கூறினார்.

Comments

Popular posts from this blog