TRB-TET: தகுதி தேர்வுகள் மூலம் 1,111 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல் நாளை  வெளியீடு

ஏற்கனவே நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வுகள் மூலம் 1,111 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அதற்கான தேர்ச்சி பெற்றவர்களின் தகுதி பட்டியல் நாளை  வெளி யிடப்படுகிறது.

இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளதாவது:-

1,111 பட்டதாரி ஆசிரியர்கள்

ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் மூலம் பள்ளிக்கல்வித்துறையில் 286 பட்டதாரி ஆசிரியர்கள், பின்னடைவு பணியிடங்கள் 623, அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் 202 பணியிடங்கள் ஆகியவற்றுக்கு ஏற்கனவே 2012, 2013, 2014-ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களை கொண்டு நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 1,111 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் தற்போது கூடுதலாக வேறு இளங்கலை பட்டம் பெற்றவர்கள், ஏற்கனவே தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்புக்கு வராதவர்கள், பி.எட். படித்த ஆண்டில் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின்போது பணித்தெரிவுக்கு உரிய தகுதி பெறாமல் தற்போது தகுதி பெற்றவர்கள் ஆகியோர் மீண்டும் வாய்ப்பு வழங்கவேண்டி விண்ணப்பித்து உள்ளனர்.

நாளை  வெளியீடு

எனவே ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் தகுதி பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் ( www.trb.tn.nic.in ) 10-ந் தேதி வெளியிடப்பட உள்ளது. அந்த பட்டியல் 20-ந் தேதி வரை இருக்கும். இதனை சரிபார்த்துக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

Comments

Popular posts from this blog