மாணவிகள் புகார் தெரிவிக்க ‘14417’ இலவச செல்போன் சேவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம் கோபி அருகே நாகதேவன்பாளையத்தில் ரூ.2 கோடி செலவில் உயர்மட்ட பாலம் கட்டப்படுகிறது. இதற்கான பணிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமை தாங்கி, பணியை தொடங்கி வைத்தார். அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

‘ஹெல்ப்லைன்’ சேவை

மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. வரும் கல்வி ஆண்டில் அனைத்து வகுப்புகளுக்கும் பாடத்திட்டம் மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்மூலம் மாணவர்கள் பிளஸ்-2 முடித்தவுடன் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

பள்ளிக்கு செல்லும் மாணவிகள் புகார்களை தெரிவிக்க ‘14417’ என்ற இலவச செல்போன் எண் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த எண்ணில் புகார் தெரிவிக்கும் மாணவிகளின் விபரம் பாதுகாக்கப்படும். இதில் புகார் தெரிவித்தவுடன் 24 மணி நேரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவில் முதல்முறையாக பள்ளி மாணவிகள் புகார்களை தெரிவிக்க தமிழகத்தில்தான் இந்த ‘ஹெல்ப்லைன்’ என்ற உதவி சேவை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சேவை 15-ந் தேதி (இன்று) முதல் அமல்படுத்தப்படுகிறது.

கம்ப்யூட்டர் மயமாக்கப்படும்

அரசு பள்ளிகளில் இந்த ஆண்டு ஒரு லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர். தனியார் பள்ளிகளை மிஞ்சுகின்ற அளவிற்கு அரசு எடுக்கும் பல்வேறு மாற்றங்களினால் அடுத்த ஆண்டு மாணவர்களின் சேர்க்கை இதைவிட கூடுதலாக இருக்கும். மலைப்பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ‘ஸ்மார்ட் வகுப்பு’ அமைக்கப்படும்.

9, 10, 11, 12 ஆகிய வகுப்புகள் கம்ப்யூட்டர் மயமாக்கப்படும். இந்த திட்டம் அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும். நாளை (இன்று) நடைபெறும் பெற்றோர் ஆசிரியர்கள் சந்திப்பு கூட்டத்தில், பள்ளியில் என்னென்ன நடைமுறைகள் செயல்படுத்த வேண்டும் என்று அறிவுரைகள் வழங்குகிறார்களோ? அதை ஏற்று இந்த அரசு பணியை மேற்கொள்ளும். அதே நேரத்தில் ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் ஒருங்கிணைப்பு பாலமாக இந்த சந்திப்பு கூட்டம் அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments

Popular posts from this blog