Flash News : TRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்த தமிழக அரசாணை செல்லும்: உச்சநீதிமன்றம்


தமிழகத்தில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணை செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,058 பணியிடங்களுக்கு கடந்த 2017-இல் தேர்வு நடைபெற்றது. அதில், 1,33,568 பேர் கலந்து கொண்டனர். சான்றிதழ் சரிபார்ப்புக்காக அழைக்கப்பட்ட 2,011 பேரில் 196 பேரிடம் பணம் பெற்றுக் கொண்டு விடைத்தாள் மதிப்பீட்டின் போது முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து, தேர்வை தமிழக அரசு ரத்து செய்தது.

இதை எதிர்த்து சில தேர்வர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசின் ரத்து உத்தரவு சரியெனத் தீர்ப்பு அளித்தது. ஆனால், இதே விவகாரத்தை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்தது. இதைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் பிறப்பித்த உத்தரவு செல்லாது. முறைகேட்டில் ஈடுபட்ட 198 பேரின் விண்ணப்பங்களை நிராகரிக்க வேண்டும். மேலும், தகுதியான நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என மார்ச் 7-இல் உத்தரவிட்டது.

இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஏப்ரல் 30-இல் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் இன்று பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்த தமிழக அரசாணை செல்லும் எனக் குறிப்பிட்ட உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.

Comments

Popular posts from this blog