ஆசிரியர்கள் தேர்வில் ஏகப்பட்ட குளறுபடி! அதிகாரிகளின் அலட்சியமா? லஞ்சம் வாங்குவதற்கான சதியா
தமிழகம் இந்தியாவில் இருந்து தனித்து விடப்பட்டதைப் போன்ற தோற்றம் ஏற்கெனவே மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. மாநிலத்தில் நீட் தேர்வு சமயங்களில் தமிழக மாணவிகளின் காதில் இருக்கும் கம்மலை எல்லாம் கழற்றச் சொல்லி, காப்பியடிக்கிறார்களா என்று ஆராய்ச்சி செய்து வந்தனர். மின்வாரியம், வங்கிகள் துவங்கி தென்னக ரயில்வே வரையில் தமிழகம் முழுக்க சம்பந்தமே இல்லாத வட இந்தியர்கள் பணியில் அமர்த்தப்பட்டிருப்பதாக ஏகப்பட்ட புகார்களும், போராட்டங்களும் நடைப்பெற்று வருகின்றன.

இந்நிலையில், அரசு அதிகாரிகளின் அலட்சியப் போக்கினால், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வுக்கு, விண்ணப்பித்தவர்கள் கண்ணீருடன் செய்வதறியாமல் நிற்கிறார்கள்.
சாதாரணமாக அரசு தேர்வு எழுதுவதற்காக விண்ணப்பிக்கும் போது, எந்த ஊர் தேர்வு மையத்தில் தேர்வு எழுத இருக்கிறீர்கள் என்று கேட்பார்கள். விண்ணப்பிப்பவர்களும் அவர்களுடைய வசதி, இருப்பிடம், தேர்வு நாளின் பணி என்பதை எல்லாம் கவனித்தில் கொண்டு விண்ணப்பத்தில் அவர்களுக்கு வசதியான தேர்வு மையத்தை தேர்வு செய்வார்கள்.
அப்படி தமிழகத்தில் வரும் 27, 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் முதல் நிலைக்கான கணினி வழித்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் விழிபிதுங்கி நிற்கிறார்கள். இந்த தேர்வை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது . உதாரணத்திற்கு தேனி மாவட்டத்தில் இந்தத் தேர்வை எழுதவுள்ள ஆசிரியர்கள் பலர், தேர்வுக்கான விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவு செய்த போது விருப்பத் தேர்வு மையமாக தங்களது சொந்த ஊரான தேனியையும், அருகில் இருக்கும் ஊர்களான மதுரை மற்றும் திண்டுக்கல் எனக் குறிப்பிட்டு விண்ணப்ப படிவத்தை பதிவு செய்துள்ளனர். இத்தேர்விற்கான ஹால் டிக்கெட்டை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று முன்தினம் வெளியிட்டது. அப்படி அவர்கள் வெளியிட்டுள்ள ஹால் டிக்கெட்டில், இந்த மூன்று ஊர்களுக்கு கொஞ்சமும் சம்பந்தமேயில்லாத சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் தேர்வு எழுத ஹால்டிக்கெட் கொடுத்திருக்கிறார்கள்.

அதாவது தேனியில் இருப்பவர்கள் சென்னைக்கோ, திருவள்ளூருக்கோ, காஞ்சிபுரத்துக்கோ வந்து தேர்வு எழுத வேண்டும். சென்னையில் இருப்பவர்கள் மதுரைக்கோ, தேனிக்கோ, திண்டுக்கல்லுக்கோ சென்று தேர்வு எழுத வேண்டும். அதிலும், தேர்வு மையத்தில் காலை 7.30 மணிக்கு முன்பாக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குளறுபடியால் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களில் பலர் வேறு வழியில்லாமல் தேர்வுக்கு செல்லாமலேயே இருக்கும் மனநிலையில் இருக்கிறார்கள். அதிகாரிகளின் அலட்சியத்தினால் இப்படி நிகழ்ந்ததா, இல்லை தமிழகத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலை கிடையாது... பணம் வாங்கிக் கொண்டு தான் வேலை கொடுப்போம் என்று அதிகாரிகள் லஞ்சம் வாங்க திட்டமிட்டு இப்படி செய்திருக்கிறார்களா என்று புலம்பியபடியே தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தவர்கள் கலைந்துச் சென்றார்கள்.

Comments

Popular posts from this blog