முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு: தேர்வர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்; ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி
   
முதுகலை பட்டதாரி ஆசிரியர் களுக்கான ஆன்லைன் தேர்வு நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதனையொட்டி தேர்வர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் நிலை-1 ஆகியவற்றுக்கான தேர்வு நாளை (வெள்ளிக் கிழமை) தொடங்கி 29-ந் தேதி வரை 3 நாட்கள் ஆன்லைனில் நடைபெறுகிறது. இந்த தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்த உள்ளது.


இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தலைவர் ஜி.லதா நிருபர்களிடம் கூறியதாவது:-

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை ஆண்கள் 63,375 பேரும், பெண்கள் 1 லட்சத்து 22,080 பேரும், திருநங்கைகள் 8 பேரும் என மொத்தம் ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 463 பேர் எழுத உள்ளனர்.

தமிழகம் முழுவதும் 30 மாவட்டங்களில் 154 மையங்களில் இந்த தேர்வு காலை, மாலை என 2 பிரிவுகளாக நடைபெற உள்ளது. ஆன்லைனில் தேர்வு நடத்தப்படுவது எளிதான முறை. மேலும் பாதுகாப்பானது. தேர்வு முடிவுகளையும் துரிதமாக வெளியிட முடியும்.

இந்த தேர்வை முறையாகவும், பாதுகாப்பாகவும் நடத்த அதிகாரிகள் அடங்கிய மேற்பார்வை குழுவினர் அமைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை கண்காணிக்க இயக்குனர்கள், கூடுதல் இயக்குனர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டு இருக்கிறது.

முறைகேடு நடைபெறாமல் இருக்க அனைத்து மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. தேர்வர்கள் குறிப்பிட்ட நேரத்தில் வர வேண்டும். கையில் அசல் ஹால் டிக்கெட் வைத்திருக்க வேண்டும்.

தேர்வர்கள் பெருவிரல் கைரேகை வைத்த பிறகு தான் மையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த தேர்வில் முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை. ஆன்லைன் தேர்வு முறை 100 சதவீதம் நம்பத்தகுந்ததாக இருக்கும். தேர்வர்கள் அச்சமின்றி தேர்வு எழுதலாம்.

ஹால் டிக்கெட்டில் உள்ள விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். பெண்கள் ‘ஹை ஹீல்ஸ்’ செருப்பு அணிந்து வரக்கூடாது. ஆண்கள் அரைக்கை சட்டை அணிந்து வருவது நல்லது. மேலும் மின்சாதன பொருட்கள் கொண்டு வர அனுமதி கிடையாது. செருப்பு தவிர மற்ற பொருட்கள் எதுவும் தேர்வு அறைக்குள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த தேர்வு முடிவுகளை 6 வார காலத்துக்குள் வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம். அதேபோல், பாலிடெக்னிக் விரிவுரையாளர் மறுதேர்வுக்கான அறிவிப்பும், உதவி பேராசிரியர்கள் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பும் விரைவில் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் உமா, உறுப்பினர்கள் அறிவொளி, தங்கமாரி, கூடுதல் உறுப்பினர் பூ.ஆ.நரேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Comments

Popular posts from this blog