அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1060 விரிவுரையாளர் பணிகளுக்கு ஜனவரி 22ஆம் தேதி முதல் பிப்ரவரி 12ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணிகள் பூர்த்தி செய்யப்படவுள்ளன. குறிப்பாக சிவில் இன்ஜினியரிங் 112, மெக்கானிக்கல் இன்ஜினியரிங் 219, எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் 91, எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் 119, கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் 135, ஆங்கிலம் 88, கணக்கு 88, இயற்பியல் 83, வேதியியல் 84 உட்பட மொத்தம் 1060 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதில் 2017 -18 கல்வி ஆண்டில் 1058 பணியிடங்களும், ஏற்கனவே நிரப்ப வேண்டிய காலி பணியிடங்கள் இரண்டும் இதன் மூலம் நிரப்பப்படும். இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் லதா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

செய்திக் குறிப்பு:

இந்த அறிவிப்பில் , "அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் காலி பணியிடத்திற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் 2019 நவம்பர் 27ஆம் தேதி வெளியிட்டது. அந்த பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் ஜனவரி 22ஆம் தேதி முதல் இணையம் மூலம் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்யலாம். பிப்ரவரி 12ஆம் தேதி மாலை 5 மணிக்கு முன்னர் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்திட வேண்டும்.

தற்போது உள்ள நடைமுறைகளின்படி இணையம் மூலம் விண்ணப்பிக்கும்போது சான்றிதழ்கள் முடிவு செய்யப்பட்டு விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ்களின் உண்மை நகல்களை பதிவேற்றம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே அறிவிப்பை முழுமையாக படித்து உரிய விதிமுறைகளை தெரிந்துகொண்டு தேவையான அனைத்து சான்றிதழ்களையும் தவறாமல் பதிவேற்றம் செய்திட வேண்டும். தேர்வு அட்டவணை இறுதி நிலையில் உள்ளதால் எக்காரணம் கொண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்படாது. எனவே உரிய காலத்திற்குள் விண்ணப்பங்களை உரிய விண்ணப்பக் கட்டணங்களை செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும் " என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


Comments

Popular posts from this blog