பொதுத் தேர்வுக்கு முன்பு திருப்புதல் தேர்வு. இந்த மார்க் ரொம்ப முக்கியம்! ஏன் தெரியுமா?


தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன.


தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து, பள்ளிகள் படிப்படியாக திறக்கப்பட்டுள்ளன.


கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி 9 - 12ஆம் வகுப்புக்களுக்கும், நவம்பர் ஒன்றாம் தேதி 1 - 8ஆம் வகுப்புக்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. அதிக எண்ணிக்கையில் உள்ள பள்ளிகளில் சுழற்சி முறையில் மாணவர்கள் பள்ளிகளுக்கு வரவழைக்கப் பட்டுள்ளனர். அதே சமயம், ஆன்லைன் கல்வியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


இந்நிலையில், 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்துவதற்கு முன்பு ஜனவரி மற்றும் மார்ச் மாதத்தில் இரண்டு திருப்புதல் தேர்வு நடத்திட பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. மேலும், பாடத்திட்டத்தை முடித்து, ஒருமுறை அனைத்து பாடத்திட்டத்தை ரிவைஸ் செய்திட, பொது தேர்வை மே மாதத்தில் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.


இந்தத் திருப்புதல் தேர்வு பொதுதேர்வை போலவே ஒரே வினாத்தாளாக தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ளது.இது மாணவர்களின் கல்வி திறனை கண்டறிய ஆசிரியர்களுக்கு உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஒருவேளை, மே மாதத்தில் கொரோனா அடுத்த அலையால் பொதுதேர்வை ரத்து செய்யவேண்டிய சூழ்நிலை உருவானால், இந்தத் இரண்டு திருப்புதல் தேர்வின் மதிப்பெண்கள் பேக்அப் மதிப்பெண்களாக கருதப்படவுள்ளது. எனவே, இந்த தேர்வில் மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் எடுப்பது அவசியமாகும்.


ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறவுள்ள திருப்புதல் தேர்வுக்கான பாடத்திட்டம் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான மாநில கவுன்சிலால் வெளியிடப்பட்டுள்ளது.


மழையால் இரண்டு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், பாடத்திட்டத்தை வேகமாக முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. தற்போதைய 12 ஆம் வகுப்பு மாணவர்கள் முதன்முறையாக பொதுத்தேர்வை எழுதவுள்ளனர். அவர்களுக்கு 10 மற்றும் 11 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டது.


கொரோனா காலத்தில் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை போக்கும் வகையில் பிரிட்ஜ் கோர்ஸ், இல்லம் தேடிக் கல்வி உள்ளிட்ட திட்டங்கள் அமலில் உள்ளது. பிரிட்ஜ் கோர்ஸ் உதவியால் மார்ச் மாதத்திற்குள் அனைத்து பாடத்திட்டத்தை முடிக்க முடியும் என அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

Comments

Popular posts from this blog