ஸ்கூல்ல 2 டீச்சர்தான் இருக்காங்க.. மாணவி கொடுத்த புகார்.. ஆக்‌ஷனில் இறங்கிய மாவட்ட ஆட்சியர்


மாணவி கொடுத்த புகாரையடுத்து மாவட்ட ஆட்சியர் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.



திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியம் பூங்குளம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை சுமார் 190 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் 9 ஆசிரியர் தேவைப்படும் இப்பள்ளியில் 2 ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். அதிலும் ஒருவர் தலைமை ஆசிரியராக உள்ளார்.


எனவே 190 மாணவ மாணவிகளுக்கு இரண்டு ஆசிரியர்களால் போதிய கல்வி கற்றுத்தர முடியவில்லை எனக் கூறியும் உடனடியாக ஆசிரியர்களை பணி அமர்த்த ஆவணம் செய்ய வேண்டும் எனவும் ஐந்தாம் வகுப்பு மாணவி சாதனா இன்று காலை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். வேண்டும் வேண்டும் ஆசிரியர் வேண்டும் என்ற பதாகையை கையில் ஏந்திய படி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனுக்கொடுத்தார்.


மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் பள்ளிக்கு வந்து ஆய்வு செய்வதாக வாக்குறுதி அளித்தார். இதனையடுத்து உடனடியாக பூங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சென்று பார்வையிட்டார். பள்ளியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார். மேலும் மாணவர்களுக்கு பாடம் நடத்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் விரைவில் செய்து தரப்படும் என தெரிவித்தார்

Comments

Popular posts from this blog