ஜெ. பழி வாங்கினார்! ஸ்டாலின் காப்பாற்றுவாரா? - கண்ணீர்விடும் பட்டதாரி ஆசிரியர்கள்! - நக்கீரன் இதழ்



தமிழக முதல்வராக கலைஞர் இருந்தபோது தேர்ந்தெடுக்கப்பட்டோம் என்ற காரணத்தாலேயே கடந்த பத்தாண்டு களாக அ.தி.மு.க. அரசாங்கத்தால் பழி வாங்கப்பட்டுள்ளோம்'' என்று வேதனைப் படுகிறார்கள் பட்டதாரி ஆசிரியர்கள்.


2010-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின்போது, பட்டதாரி ஆசிரியர்களின் பணி நியமனத்துக்காக பதிவுமூப்பு அடிப்படையில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, 2,000 பட்டதாரி தமிழ் ஆசிரியர்கள் உட்பட 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு அரசுப் பள்ளிகளில் பணி நியமன ஆணையை வழங்கினார் அப்போதைய முதல்வர் கலைஞர். மீதமுள்ளவர்களைப் பணி நியமனம் செய்வதற்குள் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் நியமனம் தள்ளிப்போனது. அடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்றதும், "பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டது இனிமேல் செல்லாது என்றும், மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வு முறைப்படிதான் தேர்வு செய்யப்படும்' என்றும் அறிவித்து, பட்டதாரி ஆசிரியர்களின் தலையில் இடியை இறக்கினார்.


ஜெயலலிதாவின் அறிவிப்புக்குக் கடும் எதிர்ப்பு எழுந்ததால், பதிவுமூப்பு அடிப்படையில் 1,500 பட்டதாரி தமிழாசிரியர்களுக்குச் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி, 242 பேரை மட்டும் பணியிலமர்த்தி எதிர்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார். மற்றவர்களைக் காத்திருப்புப் பட்டியலில் வைத்தவர், சில மாதங்களிலேயே, இனி பதிவுமூப்பு அடிப்படையில் நியமனங்கள் கிடையாதென்று அறிவித்தார்.


பின்னர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டதில், நீதிமன்றமும் மத்திய அரசின் தேர்வு முறை செல்லாது, தேர்வு செய்யப்பட்டவர் களுக்கு பணி நியமனத்தையும், கூடுதலாக அவர்களுக்கான இழப்பீட்டையும் உடனே வழங்க வேண்டுமென்று உத்தர விட்டது, ஆனால் ஜெயலலிதாவோ நீதிமன்ற உத்தரவை கிடப்பில் தூக்கிப்போட்டுவிட்டார். 2011-ம் ஆண்டிலிருந்து இன்றுவரை நியாயமாகக் கிடைக்கவேண்டிய வேலைக்காகப் பட்டதாரி ஆசிரியர்கள் போராடி வருகின்றனர்.


இதுகுறித்து பட்டதாரி தமிழ் ஆசிரியர் சங்கத்தின் .மாநில தலைவர் இராக.ராமு கூறுகையில், "தி.மு.க. ஆட்சியில் கலைஞரால் தேர்வு செய்யப்பட்டதால், நாங்களெல்லாம் பணியில் அமர்த்தப்பட்டால் கலைஞருக்கும், தி.மு.க.விற்கும் விசுவாசமாக இருப்போம் என்கிற உள்நோக்கத்தோடு எங்கள் குடிசைகளில் கொதித்த உலையை அணைத்துவிட்டார் ஜெயலலிதா. நீதிமன்றத்தில் முறையிட்டதில், மத்திய அரசின் தேர்வு முறை பொருந்தாதென்றும், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு உடனடியாகப் பணி வழங்க வேண்டுமென்றும் உத்தரவிட்டது. தேசிய ஆசிரியர் நிர்ணய கல்விக்குழுவும் எங்க ளுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு பொருந்தாது என அறிவித்தது. அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த கலைஞர், 'எங்களுக்கு பணி வழங்கவேண்டு மென்று கேட்டதோடு, அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது' என்று அறிக்கை வெளியிட்டார்.


ஆனாலும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில், அங்கும் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதோடு, உடனே எங்களைப் பணியில் அமர்த்த வேண்டும் என உத்தரவிட்டது. அதன்பிறகும் ஜெயலலிதா மனமிரங்கி வரவில்லை. பிறகு சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம், மாவட்ட தலைநகரங்களில் பேரணி என, பல கட்டப் போராட்டங்களை நடத்தினோம். அரசு வேலை கிடைக்காமல் வறுமையோடு போராடி சிலர் இறந்துவிட்டனர். பலர் தனியார் பள்ளிகளிலும், மாற்றுப் பணிகளிலும் குறைவான ஊதியத்தில் பணியாற்றிவருகிறார்கள். இவர்களில் பலர் வயது முதிர்வு அடைந்துவிட்டனர். எங்களுக்கு இப்போது வேலை கிடைத்தாலும் எங்களால் 10 ஆண்டுகள் கூட பணியில் இருக்கமுடியாத வயதை அடைந்துவிட்டோம். வெட்கத்தைவிட்டுச் சொல்கிறோம், குடும்பத்தில் உள்ளவர்கள்கூட எங்களை மதிப்பதில்லை. கலைஞரால் தேர்வு செய்யப்பட்ட எங்களுக்கு, அவர்வழியில் சிறப்பாக ஆட்சிசெய்யும் தற்போதைய முதல்வர்தான் பணி வாய்ப்பு அளிக்க வேண்டும்''’என்கிறார் கண்ணீர் விட்டபடியே.


பட்டதாரி ஆசிரியர் சங்க மாநிலப் பொருளாளர் சுப்புலட்சுமி கூறுகையில்,’ ’"ஆசிரியருக்குப் படித்துவிட்டு தகுதி இருந்தும் வாய்ப்பு மறுக்கப்பட்டு வீதியில் நிற்கிறோம். எத்தனையோ குடும்பங்களுக்கு விடியல் ஏற்படுத்திவரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எங்கள் வாழ்விலும் விடியலை ஏற்படுத்துவார் என்கிற நம்பிக்கையோடு ஏழு மாதங்களாக ஒவ்வொரு இடமாகச் சென்று மனு கொடுத்துக் காத்திருக்கிறோம்''’என்கிறார்.


பட்டதாரி ஆசிரியர் சங்க ஒருங்கிணைப் பாளர் ஜேசுராஜ் கூறுகையில், "கடந்த 10 ஆண்டுகளில் ரொம்பவே அவமானப்பட்டுட்டோம். சமுக நீதி காத்த கலைஞரின் பிள்ளையால் எங்கள் வாழ்வில் மாற்றம் வருமென்கிற நம்பிக்கையோடு ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் சென்று மனு கொடுத்து எங்கள் நிலமையை நினைவுபடுத்தி வருகிறோம்'' என்கிறார் ஏக்கத்துடன்.


திருநெல்வேலியை சேர்ந்த பட்டதாரி ஆசிரியர் மீனா,”"வேலை கிடைத்திருந்தால் இவ்வளவு சிரமத்திற்குப் போயிருக்க மாட்டோம். கொரோனா காலத்தில் சொல்லமுடியாத துயரங் களை அனுபவித்தோம். கொரோனா தொற்றினால் கணவரை இழந்துவிட்டு பிள்ளைகளோடு நிர்க்கதியாக நிற்கிறேன். இக்கட்டான கொரோனா சூழலிலும் முதிர்ச்சியோடு ஆட்சிசெய்துவரும் தமிழக முதல்வர் எங்களுக்கு பணி வழங்க வேண்டும்" என்கிறார்.


பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "இந்த விஷயம் முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. அதோடு முதல்வர், முதன்மை செயலாளரின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளோம். சட்டசபையும் கூடுகிறது. அவர்களுக்கு நியாயமான நடவடிக்கை எடுக்கப் படும்''’என்றார்.


முதல்வர் மு.க.ஸ்டாலினை அவர்களை நம்பியிருக்கிறார்கள் பட்டதாரி ஆசிரியர்கள்.

நன்றி நக்கீரன் இதழ்

Comments

Popular posts from this blog