அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை: பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் தவிப்பு


சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையால், பல இடங்களில் பாடம் நடத்தாமல் பிளஸ் 2 மாணவர்கள் பரிதவித்து வருகின்றனர்.'தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தரம் உயர்ந்து விட்டது; மாணவர்களின் சேர்க்கையும் அதிகரித்துள்ளது' என, பள்ளி கல்வி அதிகாரிகளும், அமைச்சரும் கூறி வருகின்றனர்.


இதை நம்பி, அரசு பள்ளிகளை தேடி வந்த பல மாணவர்கள், சரியாக பாடம் நடத்தப்படாததால், அவதிக்கு ஆளாகியுள்ளனர்.குறிப்பாக, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, சில பள்ளிகளில் முக்கிய பாடங்களுக்கான ஆசிரியர்களே இல்லை. பணியில் உள்ளதாக கணக்கில் உள்ள ஆசிரியர்கள் பலரை, கற்பித்தல் அல்லாத மாற்று பணிக்கு அனுப்பி உள்ளனர்.குறிப்பாக வீடியோ பாடம் சூட்டிங் எடுக்கவும்; மாவட்ட கல்வி அலுவலகம் மற்றும் பள்ளி கல்வி இயக்குனரகத்தின் நிர்வாக பணிகள் உள்ளிட்ட மாற்றுப் பணிக்கு அனுப்பி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.வேலுார் மாவட்டம் தொரப்பாடி அரசு மேல்நிலைபள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, கணிதம், அறிவியல் பாடப்பிரிவுகளில் வேதியியல் பாட ஆசிரியர் பணியிடம் பல மாதங்களாக காலியாக உள்ளது. பணியில் உள்ளதாக கணக்கில் காட்டப்பட்டுள்ள வேதியியல் ஆசிரியர் மாற்று பணிக்கு அனுப்பப்பட்டு உள்ளார்.இதனால், வேதியியல் பாடம் நடத்தவும், செய்முறை பயிற்சி வழங்கவும் ஆசிரியர் இன்றி, வேறு பள்ளிக்கு மாற முடியாமலும், தங்களின் இன்ஜினியரிங், மருத்துவ படிப்பு கனவு பாழாகி விடுமோ என்ற கவலையிலும் மாணவர்கள் உள்ளனர். இதே பள்ளியில், பொருளியல் பாடத்துக்கும் ஆசிரியர் இன்றி, பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் தற்காலிக ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார்.இப்படி, தமிழகம் முழுதும் பல மாவட்டங்களில், முக்கிய பாடங்களுக்கு ஆசிரியர் இன்றி மாணவர்கள் அவதிப்படுகின்றனர். எனவே, தமிழக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், இதற்கு உடனடி தீர்வு காணுமாறு கோரிக்கை எழுந்துள்ளது.

Comments

Popular posts from this blog