திருப்புதல் தேர்வுக்கு முக்கியத்துவம் கிடையாது: தேர்வுத்துறை அதிரடி


தமிழகத்தில் தொடர்ந்து வினாத்தாள்கள் வெளியாகி வரும் நிலையில் 10,12-ம் வகுப்பு திருப்புதல் தேர்வுக்கு முக்கியத்துவம் கிடையாது என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.


தற்போது தமிழ்நாடு 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. கொரோனாவுக்கும் மத்தியிலும் மாணவர்கள் உற்சாகமாக திருப்புதல் தேர்வில் பங்கேற்று வந்த நிலையில், தேர்வுக்கான வினாத்தாள் முன் கூட்டியே சமூக வலைதளங்களில் லீக் ஆனதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் எழுந்ததை அடுத்து, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது.


ஏற்கனவே 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் தேர்வு வினாத்தாளும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் கணித தேர்வு வினாத்தாள்கள் முன்கூட்டியே இணையத்தில் வெளியானது. அதுகுறித்து வினாத்தாள்கள் வெளியான விவகாரத்தில் விசாரணை நடந்து வரும் நிலையில், இன்று நடைபெறக்கூடிய உயிரியல் வணிக கணிதம் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் லீக் ஆகியது. அடுத்தடுத்து வினாத்தாள்கள் லீக் ஆகி மாணவர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.


இந்நிலையில் திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் வெளியான விவகாரத்தில் தி.மலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.


இதனையடுத்து தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பாக திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் லீக் சம்பந்தமாக விளக்கம் அளிக்கப்பட்டது. அதில் முக்கியமாக திருப்புதல் தேர்வு மதிப்பெண்கள் கவனத்தில் கொள்ளப்பட மாட்டாது என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து மாணவர்கள் மத்தியில் நிம்மதி ஏற்பட்டுள்ளது.


இந்த விவகாரம் குறித்து பெற்றோர்களும் மாணவர்களும் அச்சப்பட வேண்டாம். மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதுவதற்கு தயார்படுத்த திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது. அடுத்த மாதமும் ஒரு திருப்புதல் தேர்வு பொது தேர்வு மாணவர்களுக்கு இருக்கிறது. மூன்று மணி நேரம் மாணவர்கள் தேர்வு எழுத பயிற்சி பெற வேண்டும் என்பதற்காகவே திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது. அதேநேரத்தில் கட்டாயம் இந்த ஆண்டு பொதுத் தேர்வு நடைபெறும் அது பாதுகாப்பான நடைமுறையில் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.




Comments

Popular posts from this blog