டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு இந்த மாதம் வெளியாகும்.. தேர்வாணையத் தலைவர் பாலசந்திரன்..


டிஎன்பிஎஸ்சி சார்பில் நடத்தப்படும் குரூப்-2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பு இந்த மாதத்திற்குள் வெளியிடப்படும் என்று தேர்வாணைய தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அரசு பணியாளர்கள், அலுவலர்களுக்கான துறைத் தேர்வு விழுப்புரம் காமராஜர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்வு மையத்தைப் பார்வையிட்ட தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத் தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் இதுகுறித்து பேசுகையில்:


தமிழ்நாடு அரசு பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கான துறை தேர்வுகள் ஆண்டுதோறும் இரண்டு முறை நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் பணியாளர்கள் அலுவலர்களுக்கு பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் பிப்ரவரி.1 முதல் 9ம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்படவுள்ளன.


இந்தத் துறைத் தேர்வின் புதிய நடைமுறையாக பிப்ரவரி 1 முதல் 3 ஆம் தேதி வரை இணையவழி மூலம் தேர்வு நடத்தப்பட்டது. மேலும் பிப்ரவரி 7 மற்றும் 8ஆம் தேதிகளிலும் இணையவழி மூலம் தேர்வுகள் நடத்தப்படும்.


நில அளவை மற்றும் வருவாய் துறை ஊழியர்களுக்கு எழுத்து தேர்வு வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று பிப்ரவரி 4 முதல் 6 ஆம் தேதி வரையும், பிப்ரவரி 9ஆம் தேதியும் எழுத்துத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.


மேலும் கடந்த ஓராண்டு காலமாக விடைத்தாள்கள் அனைத்தும் கணினி மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு திருத்தப்படுவதால், தேர்வு எழுதுபவர்களுக்கும், விடைத்தாள்களை திருத்துபவர்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லாததால் நேர்மையான முறையில் விடைத்தாள்கள் திருத்தப்படுகிறது.


இதன்படி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிகழாண்டில் 32 வகையான தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக குரூப்-1 தேர்வுகள் மே மாதம் நடத்தப்படும். குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்கான அறிவிக்கை இந்த மாதத்தில் வெளியிடப்படும். மேலும் குரூப்-4 தேர்வுக்கு மார்ச் மாதத்தில் அறிக்கை வெளியிட திட்டமிட்டுள்ளோம்.


மேலும் அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும் இதில் 40 மதிப்பெண்கள் பெற்றவர்கள் மட்டுமே அடுத்த கட்ட தேர்வுக்கு தகுதி பெறுவார்கள்.


டிஎன்பிஎஸ்சி மூலம் நடத்தப்படும் தேர்வுகள் இப்பொழுது காலை 10 மணி முதல் பகல் 1 மணிவரை நடத்தப்பட்டு வருகின்றன. இனிமேல் 9.30 முதல் பகல் 12.30 மணி வரை தேர்வுகள் நடத்தப்படும். தேர்வு தொடங்கும் அரை மணி நேரத்திற்கு முன்பாகவே அதாவது 9 மணி அளவில் தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு வந்து விட வேண்டும்.


இனிவரும் காலங்களில் நடைபெறும் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் விண்ணப்பதாரர்களின் ஆதார் எண்ணை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் ஒரு முறை பதிவில் விண்ணப்பதாரர்கள் தங்களது ஆதார் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். ஏற்கனவே போட்டித் தேர்வு எழுதுபவர்களில் 60 சதவீதம் பேர் ஆதார் எண்ணை பதிவு செய்துள்ளனர். மீதமுள்ளவர்கள் வருகிற 28-ஆம் தேதிக்குள் தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.

Comments

Popular posts from this blog