2.5 லட்சம் பேர் பங்கேற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு நிறைவு




தமிழகம் முழுவதும் 2.5 லட்சம் பேர் பங்கேற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு நேற்றுடன் நிறைவடைந்தது.


அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1), கணினி பயிற்றுநர் (கிரேடு-1) ஆகிய பதவிகளில் 2,207 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான கணினிவழித் தேர்வு கடந்த 12 முதல் 20-ம் தேதி வரை நடைபெற்றது.


ஏற்கெனவே தமிழ், வணிகவியல், மனையியல், இந்திய கலாச்சாரம், இயற்பியல் உள்ளிட்ட தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு காரணமாக சனிக்கிழமை மட்டும் தேர்வுகள் நடைபெறவில்லை. கடைசி நாளான நேற்று கணினி அறிவியல் பாடத் தேர்வு நடைபெற்றது.


சென்னையில் தேர்வெழுதிய சிலர் கூறும்போது, ``கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்வுடன் ஒப்பிடும்போது, தற்போது வினாத்தாள் மிகவும் எளிதாகவே இருந்தது'' என்றனர்.


பொதுவாக, போட்டித் தேர்வுகள் முடிவடைந்ததும் கீ ஆன்ஸர் வெளியிடப்படுவது வழக்கம். அந்த வகையில், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுகளுக்கான கீ ஆன்ஸர் ஒரு வாரத்துக்குள் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


அதற்குப் பிறகு, தேர்வர்களின் மதிப்பெண் இணையதளத்தில் வெளியாகும். பின்னர், சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல், இறுதியாக பணிக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்படும். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மார்ச் மாதத்தில் பணி நியமன ஆணை வழங்க வாய்ப்புள்ளது.

Comments

Popular posts from this blog