மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசு ஆலோசனை!: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞர் தகவல்..!!







டெல்லி: மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.


உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது, வேலை இழந்துள்ள மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது தொடர்பாக தமிழக அரசு உன்னிப்பாக பரிசீலித்து வருவதாக தெரிவித்திருக்கிறது. கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்த சமயத்தில் மக்கள் நலப்பணியாளர்கள் சுமார் 13,500 பேர் பணி நியமனம் செய்யப்பட்டார்கள்.


அதனை தொடர்ந்து அதிமுக அரசு ஆட்சிக்கு வந்த போது 13,500 மக்கள் நலப்பணியாளர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டார்கள். அரசியல் காழ்புணர்ச்சியின் காரணமாக இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வழக்குகள் தொடரப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு பல ஆண்டுகாலமாக நிலுவையில் இருக்கிறது. தற்போது தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சியை கைப்பற்றிய பிறகு இந்த வழக்கின் விசாரணை கடந்த 3 மாதங்களில் 3 முறை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.


இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜேதீப் குப்தா, அரசியல் காழ்புணர்ச்சியின் காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது தொடர்பாக பரிசீலனை நடந்து வருகிறது. எனவே இந்த வழக்கின் விசாரணையை 4 வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கைவைத்தார்.


இந்த கோரிக்கை நீதிபதிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, வழக்கு 4 வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையின் போது, மனுதாரர் தரப்பை பொறுத்தவரை, மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது தொடர்பாக ஆலோசனைகளை செய்து வருவது வரவேற்பதாகவும், அதேசமயம் வழக்கில் விரைந்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

Comments

Popular posts from this blog