பத்து ஆண்டுகளாக ஆசிரியர்கள் பரிதவிப்பு:டெட்., விலக்களிப்பதில் பாரபட்சம்


கோவை:அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில், 2012 நவ., மாதம் 16ம் தேதி வரை பணியில் சேர்ந்த அனைவருக்கும் டெட்., தேர்வில் இருந்து விலக்களிக்கப்பட்ட நிலையில், ஒரு தரப்பினருக்கு மட்டும் விலக்களிப்பதில் இழுபறி நிலவுவதாக, அதிருப்தி எழுந்துள்ளது.


மத்திய அரசு கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தை, 2010ல் அறிமுகப்படுத்தியது. அதன் ஒரு பகுதியாக ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு (டெட்.,) நடத்தப்படுகிறது.தமிழகத்தில் டெட்., 2011- 2012ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, ஆசிரியர் பணியில் சேர, இத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியமாகியது. இந்நிலையில், 2010ம் ஆண்டு முதல் நவ., 2012ம் ஆண்டு வரை, அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் முறையாக பணி நியமனம் பெற்ற, 10 ஆயிரம் ஆசிரியர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனையில், பணியை தொடர அனுமதி வழங்கப்பட்டது.


தொடர்ந்து, அரசு பள்ளிகளில் சேர்ந்தவர்கள், அரசு உதவிபெறும் சிறுபான்மை பள்ளிகளில் டெட்., நிபந்தனை ரத்து செய்யப்பட்டு, தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.ஆனால், சிறுபான்மையற்ற அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும், 1000 ஆசிரியர்களுக்கு இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படாமல் உள்ளது. இது குறித்து, தமிழ்நாடு அரசு உதவிபெறும் சிறுபான்மையற்ற பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறுகையில், 'பத்து ஆண்டுகளாக தகுதிதேர்வு நிபந்தனையால், ஊதிய உயர்வு, மருத்துவ விடுப்பு, மகப்பேறு விடுப்பு, பதவி உயர்வு ஏதும் இன்றி ஆசிரியர்கள் பரிதவிப்பில் உள்ளனர். பலர் ஓய்வு பெறும் வயதை எட்டியும், இன்னும் குழப்பம் தீரவில்லை. 2010 முதல் 2012 நவ., வரை அரசு பள்ளியிலும், சிறுபான்மை அரசு உதவிபெறும் பள்ளியிலும் சேர்ந்தவர்களுக்கு, விலக்கு அளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளனர்.ஆனால், எங்களுக்கு எவ்வித தீர்வும் ஏற்படுத்தவில்லை. வரும், ஏப்., மாதம் டெட்., தேர்வு நடைபெறவுள்ள நிலையில், எங்களது நிலைப்பாட்டை அரசு புரிந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Comments

Popular posts from this blog