அரசு நிர்வாகத்தை உயர்நீதிமன்றம் நடத்த முடியாது!: சமச்சீர் கல்விக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்..!!





ஜெ.ஜெ. கட்சி என்ற அமைப்பின் நிர்வாகி ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றினை தொடர்ந்திருந்தார். மனுவில், தமிழக மாணவர்கள் உயர்கல்வி மற்றும் மத்திய, மாநில அரசுகளின் வேலைவாய்ப்புகளை எதிர்கொள்வதற்கு நுழைவுத்தேர்வு, தகுதித்தேர்வு ஆகியவற்றை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்குழு வடிவமைக்கும் பாடத்திட்டத்தின் படியே நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.


மத்திய இடைநிலை கல்வி வாரியம், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுவின் மூலமாக பாடத்திட்டம் உருவாக்கப்படுவதாகவும், தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையின் மூலமாக அறிமுகப்படுத்தப்பட்ட சமச்சீர் கல்வி பாடப்புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் அரசு ஊழியர்கள், அரசு பள்ளி ஆசிரியர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசியல் தலைவர்கள் ஆகியோரது பிள்ளைகள் நடுவன கல்வி வாரியத்தில் கல்வியும், அரசுக்கு வரி செலுத்தாத மக்கள் சமச்சீர் கல்வி முறையும் பின்பற்றப்படுகிறது.


இருவேறு கல்விமுறை காரணமாக மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது என்றும் மனுவில் தெரிவித்திருந்தார். எனவே தமிழகத்தில் ஒரே மாதிரியான கல்வியை கொண்டுவர வேண்டும். குறிப்பாக தமிழகத்தில், அரசு பள்ளிகளில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்குழு பாடத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.


அப்போது நீதிபதிகள் மனுதாரரிடம், தமிழகத்தில் அரசு பள்ளிகளில் என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று எந்த சட்டத்தில் எந்த விதி உள்ளது என்று சரமாரியான கேள்விகளை முன்வைத்தனர். மேலும் அரசு நிர்வாகத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. அரசு நிர்வாகத்தை உயர்நீதிமன்றம் நடத்த முடியாது என்று கருத்து தெரிவித்து, வழக்கில் அபராதம் விதிப்பேன் என்றும் எச்சரித்தனர். பின்னர் அரசு பள்ளிகளில் என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Comments

Popular posts from this blog