50 சதவீதத்துக்கு கீழ் வருகைப்பதிவு; அதிகரிக்கிறது ஆசிரியர்கள் விடுப்பு : கற்பித்தல் பணியில் பாதிப்பு


கோவை:பள்ளிகளில் 50 சதவீதத்திற்கும் கீழ், ஆசிரியர்கள் வருகைப்பதிவு குறைந்து வருவதால், கற்பித்தல் பணிகள் பாதிக்கப்படுவதாக, புகார் எழுந்துள்ளது.தமிழகம் முழுக்க, ஆசிரியர்கள், மாணவர்கள் வருகைப்பதிவு, எமிஸ் இணையதளத்தில், தினசரி 'அப்டேட்' செய்யப்படுகிறது.


கோவை மாவட்டத்தில், சமீபகாலமாக ஆசிரியர்கள் வருகைப்பதிவு குறைந்து வருவதாக, ஏற்கனவே தலைமையாசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதிக மாணவர் சேர்க்கை, ஆசிரியர்கள் பற்றாக்குறை, வாரத்தில் ஆறு நாட்களும் பணி செய்ய வேண்டிய நிர்ப்பந்தம், கற்பித்தல் அல்லாத பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்துதல் உள்ளிட்ட, பல்வேறு பணிச்சுமைகளால், மருத்துவ விடுப்பு எடுக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை, அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.விடுப்பில் உள்ள ஆசிரியர்களுக்கு பதிலாக, பணியில் இருப்பவர்கள், வகுப்பை கையாள்வதால், இரட்டை பணிச்சுமை நிலவுவதாக, புகார் எழுந்துள்ளது.


 இதை உறுதி செய்யும் வகையில், மாநில அளவில், எமிஸ் இணையதளத்தை ஆய்வு செய்த போது, ஆசிரியர்கள் வருகைப்பதிவு குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.அனைத்து மாவட்டங்களிலும் இப்பிரச்னை நீடித்தாலும், கோவை மாவட்டத்தில் மட்டும், 50 சதவீதத்திற்கும் கீழ், ஆசிரியர்கள் வருகைப்பதிவு குறைந்துள்ளதாக, ஆய்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதனால், மாவட்ட, வட்டார கல்வி அலுவலர்கள் மூலம், பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகைப்பதிவை, அதிகரிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறுகையில், 'பள்ளிகள் திறந்தவுடன், தொடர்ச்சியாக பல்வேறு அழுத்தங்களை, ஆசிரியர்கள் சந்திக்கின்றனர். பயிற்சி வகுப்பில் பங்கேற்றல், இல்லம் தேடி கல்வித்திட்ட பணிகளை ஒருங்கிணைத்தல், புள்ளிவிபரங்களுக்கு பதில் அளித்தல் உள்ளிட்ட பணிகளால், விடுப்பு எடுப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 


இதனால் பணியில் ஏற்படும் தொய்வை, போர்க்கால அடிப்படையில் சரி செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோடு, கூடுதலாக நடப்பு கல்வியாண்டில் சேர்ந்த மாணவர்கள் எண்ணிக்கை, ஆசிரியர் காலியிடங்கள், அடிக்கடி விடுப்பு எடுப்பவர் குறித்த விபரங்கள் அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது' என்றனர்

Comments

Popular posts from this blog