வீட்டுப்பாடம் செய்ய நேரமில்லை! இல்லம் தேடி கல்விக்கு குறையுது வருகை




கோவை : பள்ளிகளில் வழங்கப்படும் வீட்டுப்பாடங்களை செய்ய நேரமில்லை என்பதால், இல்லம் தேடி கல்வி திட்ட மையங்களுக்கு வரும் மாணவர்களின் வருகை குறைந்து விட்டதாக, தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர்.


கொரோனா காலங்களில் பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்கள் மத்தியில், கற்றல் இடைவெளி அதிகரித்துள்ளது. இதனை சரிசெய்யும் நோக்கில், 'இல்லம் தேடி கல்வி' திட்டத்தை தமிழக அரசு துவக்கியுள்ளது. கோவையில் இதுவரை 5,800 மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.ஜன., மாதம் பள்ளிகள் மூடப்பட்டு இருந்ததால், இல்லம் தேடி கல்வி மையங்களுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. பிப்., 1ல் பள்ளிகள் திறக்கப்பட்டது முதல் தற்போது வரை, மாணவர்களின் வருகை கணிசமாக குறைந்துள்ளது.


இதுகுறித்து, தன்னார்வலர் ஒருவர் கூறுகையில், 'ஜன., பிப்., மாதங்களை ஒப்பிடுகையில் மாணவர்களின் வருகை குறைந்துள்ளது. தொடர்ந்து வராமல் உள்ள மாணவர்களை சந்தித்து கேட்டபோது, பள்ளி முடிந்தததும் மீண்டும் மையத்திற்கு வருவது சிரமமாக உள்ளதாக தெரிவித்தனர். பள்ளிகளில் கொடுக்கும் வீட்டு பாடங்களை முடிக்க நேரமின்மையால், வருவதில்லை என்று பலர் தெரிவித்தனர்' என்றார்.


அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மையங்களில் வீட்டுப்பாடங்கள் செய்ய அனுமதி இல்லை. பள்ளி முடிந்து பல மாணவர்கள் 5:30 மணிக்குதான் வீடுகளுக்கு செல்கின்றனர். உடனடியாக மையங்களுக்கு வருவதை விரும்புவதில்லை. பள்ளி வீட்டுப்பாடங்களை மையங்களில் செய்ய அனுமதி அளித்தால், மேலும் சில மாணவர்கள் வர வாய்ப்பு உள்ளது' என்றார்.


Comments

Popular posts from this blog