புதுச்சேரி அரசு ஊழியர்களின் பிள்ளைகளை அரசுப் பள்ளியில்தான் சேர்க்க வேண்டும் - சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்ற சபாநாயகர் பரிந்துரை



புதுச்சேரியில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில்தான் சேர்க்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்ற முதலமைச்சருக்கு பரிந்துரை செய்துள்ளதாக சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.


புதுச்சேரியில் அண்மையில் மழலையர் பள்ளிகள் திறக்கப்பட்டன.அதில் அரசு பள்ளியில் பள்ளி கல்வி துறை இயக்குனர் ருத்ர கவுடு தனது மகனை வீட்டுக்கு அருகில் உள்ள அரசு பள்ளியில் சேர்த்தார். அவரை தொடர்ந்து சில போலீசாரும் அரசு ஊழியர்களும் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர்.


இந்த நிலையில் அரசின் சலுகைகளை அனுபவிக்கும் அரசு ஊழியர்கள் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளியில் தான் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. இந்த நிலையில் புதுச்சேரியில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில்தான் சேர்க்க வேண்டும் என்று வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் இயற்ற முதலமைச்சருக்கு பரிந்துரை செய்துள்ளதாக சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.


புதுச்சேரியில் மணவெளி தொகுதிக்கு உட்பட்ட அரசு ஆரம்பப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த பள்ளி முதல்வர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் சட்டப்பேரவையில் நடைபெற்றது.


பேரவைத் தலைவர் செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு, இணை இயக்குனர் சிவகாமி உள்ளிட்ட தலைமை ஆசிரியர்கள் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


கூட்டத்தில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவது குறித்தும், கட்டிடம் இல்லாத அரசு பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டித் தருவது மற்றும் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது குறித்தும் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.


தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளியில் உள்ள குறைகளை பேரவைத் தலைவரிடம் விளக்கமாக எடுத்துக் கூறினார்கள். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் செல்வம், மணவெளி தொகுதிக்கு உட்பட்ட 16 பள்ளிகளைச் சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களை சந்தித்து அரசு பள்ளியில் உள்ள குறைகளை கேட்டிறிந்ததாகவும், அவர்கள் கூறிய குறைகள் அனைத்தும் விரைவில் தீர்க்கப்படும் என்றும் உறுதியளித்தார்.



அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில்தான் சேர்க்க வேண்டும் என்று வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் இயற்ற முதல்வருக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


இதனை தொடர்ந்து தனது பிள்ளையை அரசு பள்ளியில் சேர்த்த புதுச்சேரியின் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ருத்ர கவுடுக்கு சால்வை அணிவித்தும் நினைவு பரிசு வழங்கியும் சபாநாயகர் செல்வம் பாராட்டு தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog