"பாடம் நடத்த டீச்சர் இல்லை" அரசுப் பள்ளியின் அவலநிலை.. கதவை பூட்டி போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள்..!!!





பள்ளியில் போதுமான அளவு ஆசிரியர்கள் இல்லாததால் பெற்றோர்கள் சாலைமறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வேலூர் மாவட்டத்திலுள்ள அடுக்கம்பாறை பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல் செயல்பட்டு வருகின்றது. இப் பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட 4 ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இதனால் கல்வி தரம் பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பள்ளியில் சேதம் அடைந்திருந்த 2 கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. ஆனால் இதுவரை கட்டிடங்கள் கட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது 2 வகுப்பறைகள் மட்டுமே உள்ளதால் மாணவர்களை மரத்தடியில் அமர வைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்துகின்றனர். மேலும் பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லை.


அதோடு பள்ளியின் அருகில் கழிவுநீர் தேங்கி நிற்கின்றது. அதுமட்டுமல்லாது தரமற்ற சத்துணவு மாணவர்களுக்கு வழங்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதனால் கோபமடைந்த மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு பூட்டு போட்டு ஸ்ரீபுரம் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது மாணவர்களின் பெற்றோர் இந்தப் பள்ளிக்கு போதுமான வகுப்பறைகள் மற்றும் சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டும் என்றும், தேவையான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபற்றி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். அதன் பின்னரே மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Comments

Popular posts from this blog