தமிழ்நாடு அரசு தேர்வாணையப் பணியாளர் ஆணையத் தேர்வு விண்ணப்பத்தில் தவறுகளை திருத்துவதற்கான வாய்ப்பு கிடைக்குமா?




தமிழ்நாடு அரசு தேர்வாணையப் பணியாளர் ஆணையத் தேர்வு விண்ணப்பத்தில் தவறுகளை திருத்துவதற்கான வாய்ப்பை செயல்படுத்த விண்ணப்பதாரர்கள் கோரியுள்ளனர்.தமிழ்நாடு அரசு தேர்வாணைப் பணியாளர் ஆணையம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான தேர்வு தொகுதி இரண்டுக்கான தேர்வை அறிவித்துள்ளது.


அதில் 5500க்கும் அதிகமான நேர்முகத் தேர்வு, மற்றும் நேர்முகத்தேர்வு அல்லாத பணியிடங்களுக்கு மே 21 ல் தேர்வு நடத்தி பணி நியமனம் செய்ய உள்ளது. இதற்கான'ஆன்லைன்' www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் மார்ச் 23 வரை விண்ணப்பிக்க அறிவித்துள்ளது. 'ஆன் லைன் ' விண்ணப்பத்திற்கு 'ஓரு முறை பதிவு' செய்து அதன் பின்னரே தேர்வுக்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியது ஆணையத்தின் நடைமுறையாக உள்ளது. இதில் பலர் தங்களது ஒரு முறை பதிவு எண் மற்றும் கடவுச் சொல்லை மறந்து விடுகின்றனர்.


ஆனால் அதை இணையத்தில் மீட்க அதில் பதிவு செய்துள்ள அலைபேசி எண் மற்றும் இ.மெயில் முகவரி அவசியம்.இல்லாதவர்கள் மீட்க முடியாமல் தவிக்கின்றனர். அது போல மீண்டும் ஒரு முறை பதிவு செய்யும் போது இத்தகவல்கள் முன்பே பதிவு செய்யப்பட்டுள்ளது என்று பதிவு செய்ய முடிவதில்லை. இதைத் தவிர்க்க ஆணையம் புதிய அலைபேசி எண் அல்லது இ.மெயில் முகவரி இதில் ஏதாவது ஒன்றை பயன்படுத்த அனுமதித்து மீட்க அனுமதிக்கலாம்.அடுத்து, தேர்வுக்கான விண்ணப்பத்தில் 'சாய்ஸ்' முறையில் உதாரணத்திற்கு ஆண்/பெண், கல்வித் தகுதி, பொதுதமிழ்/பொது ஆங்கிலம், தேர்வு மையங்கள் போன்றவற்றில் தேர்ந்தெடுப்பதில் விண்ணப்பதாரர்கள் தவறாக தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அதிகம். முன்னர் இந்த தவறுகளை திருத்த கட்டணம் செலுத்தப்பட்ட பின்னரும் குறிப்பிட்ட காலத்திற்குள் திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டது.


இந்த முறை அந்த வாய்ப்பும் அளிக்கப்படவில்லை. விண்ணப்பித்தவுடன் பார்க்கவும்/திருத்தவும் என்ற இணைப்பில் பார்க்க மட்டும் முடிகிறது. திருத்தும் இணைப்பு செயல்படவில்லை. இந்த தேர்விற்கு விண்ணப்பிப்பதிலும், விண்ணப்பித்தவர்களின் தவறுகளை திருத்திக் கொள்ளவும் தடுமாறி வருகிறார்கள்.


மேலும் ஆணையத்தின் டோல் ப்ரீ எண் இணைப்பு கிடைப்பதும் அரிதாக உள்ளது. குறைகேட்பு இ.மெயிலில் பதில் வருவதும் அரிதாக உள்ளது.மீண்டும் விண்ணப்பிக்கவும் வழியில்லை. இதனால் தவறாக விண்ணப்பித்த தேர்வர்கள் பலரும் தேர்வுக்கு தயாராக முடியாமல் தவிக்கின்றனர். இதற்கான பொருத்தமான நடவடிக்கையை விரைவாக ஆணையம் மேற்கொள்ள வேண்டுமென பலரும் எதிர்பார்க்கின்றனர்.

Comments

Popular posts from this blog