10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் எப்படி இருக்கும்?- அன்பில் மகேஷ் பேட்டி




10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வில் நடத்தப்படாத பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப் படாது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.


அடுத்த மாதம் நடைபெற உள்ள 10 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுக்கு தயாராகுதல், தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குதல், பள்ளிக்கட்டிடங்களில் நிலை உள்ளிட்ட பள்ளிக் கல்வித் துறையின் அனைத்து செயல்பாடுகள் குறித்து ஆலோசிப்பதற்காக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான கூட்டம் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்றும், இன்றும் நடைபெற்றது. இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிறப்பாக செயல்பட்ட காஞ்சிபுரம், திருப்பத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.


தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "தேர்தலுக்காக கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுகிறோம். அந்த வகையில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறிய மாநிலத்திற்கென தனித்துவமான கல்விக் கொள்கை உருவாக்குவதென்பது மிக முக்கியமான அறிவிப்பு. தனித்துவமான கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டும் என்ற முதல்வரின் கனவைத்தான் இன்று முதலமைச்சர் வெளியிட்டிருக்கிறார்.


நீதியரசர் முருகேசன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு, இன்றைக்கு இருக்கும் கல்வியின் நிலை, நாட்டின் நிலைமை, எதிர்காலத்தில் எப்படியெல்லாம் இருக்கும், மாணவர்களின் தேவை ஆகியவற்றை கலந்தாலோசித்து ஒரு வருட காலத்தில் இதற்கான கொள்கையை வடிவமைக்கும், இந்த அறிவிப்பு இதுவரை இல்லாத மிகப் பெரிய மாற்றத்தை நம்முடைய மாநில கல்வித்துறையில் கொண்டுவரும். குழு தனது பணிகளை உடனடியாக தொடங்க இருக்கிறது.


தேசிய கல்வி கொள்கை பொறுத்தவரை 3,5,8 வகுப்புக்கு பொதுத்தேர்வு, இரு மொழிக் கொள்கைக்கு வேட்டு வைக்கும் விதமான அறிவிப்பு, குலக்கல்வித் திட்டத்தை மறைமுகமாக 6ம் வகுப்பிலிருந்து நுழைக்க முயற்சி இது போன்று கருத்துக்களை பரிந்துரையின் போதிருந்தே முதலமைச்சர் எதிர்த்து வருகின்றார். தொடர்ந்து தேசிய கல்விக்கொள்கை எந்தவிதத்திலும் பாதித்து விடக்கூடாது என்பதற்காகத்தான் தற்போது மாநில கல்விக்கொள்கை உருவாக்குகிறோம், நம்முடைய பண்பாடு, கலாச்சாரம், கல்வி நிலைமை ஆகியவற்றை உணர்ந்துதான் மாணவர்களுக்கு என்ன தேவை என்பதை நன்கு உணர்ந்தவர்கள் குழுவில் இருகின்றனர். பொதுத்தேர்வை பொருத்தவரை நடத்தப்படாத பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப் படாது" எனக் கூறினார்.

Comments

Popular posts from this blog