தமிழ்நாட்டில் 415 தனியார் பள்ளிகள் மூடப்படும் அபாயம்!




தமிழ்நாட்டில் உள்ள 25 தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு ஆரம்ப அனுமதி இல்லாததால் அந்தப் பள்ளிகள் வரும் கல்வியாண்டில் மூடப்படும் அபாயமும், தொடக்கக்கல்வித்துறையில் தொடக்க அனுமதி பெறாத 390 நர்சரிப் பிரைமரிப் பள்ளிகளும் வரும் கல்வியாண்டில் மூடப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது..


பள்ளிக்கல்வித்துறையில் செயல்பட்டு வரும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நாளை மறுதினம் (ஏப். 5) சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறுகிறது.


இந்தக் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்க உள்ளனர். கூட்டத்தில் தொடக்க கல்வித்துறையின் சார்பில் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கப்பட்ட விவரம், பழுதடைந்த பள்ளிகளின் எண்ணிக்கை, கட்டடங்களின் எண்ணிக்கை, நர்சரி, பிரைமரிப் பள்ளிகளின் அங்கீகாரம் பெறப்பட்ட விவரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.


மெட்ரிக்குலேசன் பள்ளிகள் சார்பில் பள்ளி மாணவர்களிடம் கூடுதலாக கட்டணம் வசூல் செய்ததாக கல்வித் தகவல் உதவி மையமான 14417 என்ற எண்ணிற்கு பெறப்பட்ட 30 மனுக்களில் 5 மனுக்களின் மீது மட்டுமே விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.


மேலும் 25 மனுக்களின் மீதான விசாரணை நிலுவையில் உள்ளது. பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் பள்ளியின் அங்கீகாரம் தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.


ஆனாலும், மாவட்டங்களில் பெரும்பாலான பள்ளிகளில் அங்கீகாரம் புதுப்பிக்கப்படாமல் உள்ளது. திருவள்ளுவர் மாவட்டத்தில் 343 பள்ளிகளில் 121 பள்ளிகள், சென்னையில் 290 பள்ளிகளில் 85 பள்ளிகள் என 11 மாவட்டத்தில் உள்ள மெட்ரிக்குலேசன் பள்ளிகள் 25 சதவீதத்திற்கு மேல் அங்கீகாரத்தை புதுப்பிக்கவில்லை.


தமிழ்நாட்டில் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநரகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பள்ளிகளில், 25 பள்ளிகள் தொடங்க அனுமதி பெறாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்தப் பள்ளிகள் வரும் கல்வியாண்டிற்குள் அனுமதி பெறாவிட்டால், மாணவர்களை சேர்க்கத் தடைவிதிக்கப்படும் எனக் கல்வித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.


அதேபோன்று, தொடக்கக் கல்வித்துறையில் செயல்பட்டு வரும் நர்சரி, பிரைமரிப் பள்ளிகளில் 390 தனியார் பள்ளிகள் தொடங்க அனுமதி பெறாமல் செயல்பட்டு வருகின்றன என்ற தகவலும் வெளியாகி உள்ளது.


இந்தப்பள்ளிகளும் வரும் கல்வியாண்டு தொடங்குவதற்குள் தொடக்க அனுமதியை வாங்க வேண்டும். தொடக்க அனுமதி பெறாவிட்டால் வரும் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்க அனுமதி அளிக்கப்படாது. இந்த நிலையில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் இதுகுறித்து தீவிரமாக விவாதிக்கப்பட உள்ளது.

Comments

Popular posts from this blog