போலி சான்றிதழ்கள் மூலம் பணியில் சேர்ந்த ஆயிரம் பேர்- அதிர்ச்சியில் தமிழ்நாடு தேர்வுத்துறை




தமிழ்நாடு தேர்வுத்துறை போல் அச்சிடப்பட்ட போலி மதிப்பெண் சான்றிதழ் அளித்து, அஞ்சல் துறை உள்ளிட்ட ஒன்றிய அரசு நிறுவனங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர் பணியில் சேர்ந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.



ஒன்றிய அரசின் அஞ்சல் துறை, எண்ணெய் நிறுவனங்கள், வங்கிகள் போன்றவற்றில் எழுத்துத்தேர்வு இல்லாமல் மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்படும் தேர்வுகளுக்கு, வடமாநிலத்தைச்சேர்ந்தவர்கள் போலி மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கி பணியில் சேர்ந்துள்ளனர். பணியில் சேர்ந்தவர்களின் சான்றிதழ்களை சரிபார்ப்பதற்காக அரசு தேர்வுத்துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டபோது தொடர்ந்து அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வருகின்றன.


போலி மதிப்பெண் சான்றிதழ்களில் முதன்மை மொழியாக இந்தி பெரும்பாலும் அச்சிடப்பட்டுள்ளது. மேலும், சான்றிதழில் கையொப்பமிட்ட அலுவலர்கள் இந்தியிலும் கையெழுத்திட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு தேர்வுத் துறையால் வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்களில் அலுவலர்களின் கையொப்பம் தமிழ் மொழியில் மட்டுமே இடம்பெறும் ‌என்பது குறிப்பிடத்தக்கது.


உத்தரப்பிரதேச மாநிலம், தியோரியா மாவட்டத்திலுள்ள அஞ்சல் அலுவலகங்களில் பணியில் சேர்ந்தவர்களில் 500-க்கும் மேற்பட்டோர் போலி தமிழ்நாடு மதிப்பெண் சான்றிதழ்களை கொடுத்து பணியில் சேர்ந்துள்ளனர் என அரசுத்தேர்வுகள் துறை கண்டுபிடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


இதுவரை 2ஆயிரத்து 500 மதிப்பெண் சான்றிதழ்களை ஆய்வு செய்ததில் ஆயிரத்திற்கும் மேல் போலி எனவும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் ஏற்கெனவே 300க்கும் மேற்பட்டோர் போலி மதிப்பெண் சான்றிதழ்கள் கொடுத்து தமிழ்நாடு அஞ்சல் அலுவலகங்களில் சேர்ந்து பணிபுரிந்து வருவதாகத் தெரிகிறது.


பெரும்பாலான மதிப்பெண் சான்றிதழ்கள் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அச்சடிக்கப்பட்டு இருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்த மதிப்பெண் சான்றிதழ்கள் எழுத்துத்தேர்வு இன்றி மதிப்பெண் அடிப்படையில் அஞ்சல் அலுவலகங்களில் தேர்வு செய்யப்படும் பணிகளுக்காக போலியாக அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.



கர்நாடகாவில் தமிழ்நாடு போலி மதிப்பெண் சான்றிதழ்களை அளித்து பணியில் சேர்ந்த இருவர் கைது செய்து, அம்மாநில காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog