டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வை ஆங்கிலத்தில் மட்டும் நடத்துவதா?- அன்புமணி கண்டனம்


குழந்தை பாதுகாப்பு அதிகாரி பணிக்கான போட்டித் தேர்வின் முதல் தாள் ஆங்கிலத்தில் மட்டும்தான் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இதற்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வரும் ஜூன் 19ஆம் தேதி நடத்தப்படவிருக்கும் குழந்தை பாதுகாப்பு அதிகாரி பணிக்கான போட்டித் தேர்வின் முதல் தாள் ஆங்கிலத்தில் மட்டும்தான் நடத்தப்படும் என்றும் குறிப்பிட்ட 5 பாடங்களில் பட்டம் பெற்றவர்கள் மட்டும்தான் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது அதிர்ச்சியளிக்கிறது என்றும், தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மாநிலத்தில் அம்மொழியைப் புறக்கணித்துவிட்டு போட்டித் தேர்வு நடத்துவது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


தமிழக அரசின் சமூகப் பாதுகாப்புத் துறையில் காலியாக உள்ள 16 குழந்தை பாதுகாப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு வரும் ஜூன் 19ஆம் தேதி நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. இந்தப் போட்டித் தேர்வில் பங்கேற்க கடந்த ஒன்றாம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்தப் பணிக்கு சமூகவியல், சமூகப் பணி, உளவியல், குழந்தை பாதுகாப்பு, குற்ற ஆய்வியல் ஆகிய பாடங்களில் பட்டப்படிப்பை முடித்தவர்கள் மட்டும் தான் பங்கேற்க இயலும் என்றும், இரு தாள்களாக நடத்தப்படவிருக்கும் இந்தத் தேர்வுகளின் முதல் தாள் ஆங்கிலத்தில் மட்டும்தான் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இந்த அறிவிப்பு தமிழக அரசின் அறிவிக்கப்பட்ட நிலைப்பாட்டுக்கு முற்றிலும் எதிரானது என்று அன்புமணி தெரிவித்துள்ளார். மத்திய அரசால் நடத்தப்படும் அனைத்துப் போட்டி மற்றும் நுழைவுத் தேர்வுகள் தமிழ் மொழியில் மட்டும்தான் நடத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது என்றும், அதற்கு முன்பாகவே இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தில் பாமக வழக்குப் பதிவு செய்திருக்கிறது என்றும், இத்தகைய சூழலில் ஆங்கிலத்தில் மட்டும்தான் போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று தேர்வாணையம் அறிவித்திருப்பது சமூக அநீதி ஆகும் என்றும் அன்புமணி கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog