10-ம் வகுப்பு கணித வினாத்தாளில் தவறான கேள்விகள் இடம்பெறவில்லை - தேர்வுத் துறை அதிகாரிகள் விளக்கம்



பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வில் தவறான கேள்விகள் எதுவும் இடம் பெறவில்லை என்று தேர்வுத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.


தமிழக பள்ளிக்கல்வியின் பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த 6-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கணித பாடத்தேர்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு நடைபெற்ற இந்த தேர்வில் ஒருசில வினாக்கள் நடத்தப்படாத பாடங்களில் இருந்து கேட்கப்பட்டதாகவும், அந்த கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் எனவும் ஆசிரியர்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.


இதையடுத்து கருணை மதிப்பெண் வழங்குவது தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்தார்.


அதன்படி தேர்வுத் துறை நிபுணர் குழுவினர் வினாத்தாள் சர்ச்சை குறித்து நேற்று ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து தேர்வுத் துறை அதிகாரிகள் சிலர் கூறும்போது, ''10-ம் வகுப்பு கணிதத் தேர்வில் தவறான கேள்விகள் எதுவும் இடம்பெறவில்லை என்பதை நிபுணர் குழு உறுதி செய்துள்ளது. பழைய பாடத்திட்டத்தில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படவில்லை. எனவே, கருணை மதிப்பெண் வழங்குவதற்கு வாய்ப்புகள் கிடையாது'' என்று தெரிவித்தனர்.


அறிவியல் பாடத்தேர்வு இன்று (மே 26) நடைபெற உள்ளது. மேலும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 30 -ம் தேதியுடன் முடியவுள்ள நிலையில், தேர்வு முடிவுகள் ஜூன் 17-ல் வெளியிடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog