வேதியியல் பாட வினாத்தாள் கடினமாக இருந்தது: 12ம் வகுப்பு மாணவர்கள்




12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடைபெற்ற வேதியியல் பாடத்திற்கான வினாத்தாள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற்று வரும் 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வை 8 லட்சத்து 37 ஆயிரத்து 311 பேர் எழுதி வருகிறார்கள். நேற்று வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் ஆகிய பாடங்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற்றது.


இதில் வேதியியல் தேர்வு வினாத்தாள் கடினமாக இருந்ததாக மாணவ-மாணவிகள் தெரிவித்துள்ளனர். 2 மற்றும் 3 மதிப்பெண்களுக்கான வினாக்களில் எதிர்பார்க்காத பாடத்தில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டதாகவும், குறிப்பாக 3வது திருப்புதல் தேர்வு நடத்தப்படாத நிலையில், அந்த திருப்புதல் தேர்வுக்கான பாடத்திட்டத்தில் இருந்து கட்டாயமாக பதில் அளிக்கக்கூடிய பகுதிகளில் வினாக்கள் அமைந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.


நடந்து முடிந்த தமிழ், ஆங்கிலம் பொதுத்தேர்வு வினாத்தாள்கள், நடத்தி முடிக்கப்பட்ட 2 திருப்புதல் தேர்வுக்கான பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே அமைந்து இருந்ததால், அதை நம்பி தேர்வை சந்தித்தது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாக மாணவர்கள் கூறியுள்ளனர்.


வேதியியல் தேர்வை சந்தித்த மாணவர்களுக்கு 1 மதிப்பெண் மற்றும் 5 மதிப்பெண் வினாக்கள்தான் கைக்கொடுக்கும் வகையில் இருந்ததாக ஆசிரியர்கள் சிலரும் தெரிவித்துள்ளனர்.

Comments

Popular posts from this blog