2ஆண்டுக்கு பின்னர் பொதுத்தேர்வை சந்திக்கும் மாணவர்கள் அச்சமின்றி பொதுத் தேர்வு எழுதுவது எப்படி?: தலைமை ஆசிரியர் தரும் பயனுள்ள தகவல்கள்




கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறவில்லை.


தற்போது கொரோனா பரவல் குறைந்து பள்ளிகள் வழக்கம் போல் செயல்படுவதால் நடப்பு கல்வியாண்டில் 10ம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ்2 மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்தப்பட உள்ளது.பிளஸ்2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் மே 5ம்தேதி தொடங்குகிறது. 2 ஆண்டுகளுக்கு பின் பொதுத்தேர்வு நடைபெற உள்ளதால் மாணவர்கள் அச்சமின்றி தேர்வை சந்திப்பது குறித்து மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நெல்லை மாவட்டம் கடம்பன்குளம் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சுந்தரம் தெரிவித்த ஆலோசனைகள் வருமாறு:தேர்வுக்கு தயாராவது என்பது மிகவும் முக்கியமான ஒன்று. தமிழக அரசின் கல்வித்துறை அறிவித்துள்ள பாடப்பகுதியை நன்கு அறிந்து கொள்ளுங்கள். ஏற்கனவே படித்த பாடங்களையே மீண்டும் மீண்டும் படியுங்கள். இது மிக முக்கியம். தேர்வு நேரத்தில் புதிதாக படிப்பது என்பது மிகவும் கடினம் என்பதால் படித்த பாடங்களையே மீண்டும் படித்துப் பார்த்தால் மிகவும் நல்லது. திட்டமிட்டு படித்தலும் மிகவும் முக்கியம். உங்கள் ஆசிரியர்கள் அறிவுரைப்படி தேர்வுக்கு தயாராகுங்கள்.


முதலில் ஒரு மதிப்பெண் வினாக்கள், பின்னர் சிறு, குறு வினாக்கள் அதற்குப் பிறகு பெரிய வினாக்கள் என்ற அடிப்படையிலேயே தேர்வுக்கு தயாரானால் தன்னம்பிக்கை கூடி தேர்வில் வெற்றி பெறுவது மிகவும் எளிது. 'எளிமையில் இருந்து கடினம்' என்ற முறையை பின்பற்றினால் மிகவும் பயனுள்ளதாக அமையும். ஒரு மதிப்பெண் வினாக்கள்தானே என்று சாதாரணமாக எண்ணக்கூடாது. அதற்கும் தயாரிப்பு மிக அவசியம். ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்ச்சி பெறவும் உதவும். நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறவும் துணை நிற்கும். படங்களை வரைந்து பாருங்கள். கணக்குகளை செய்து பாருங்கள். மறக்கக் கூடியவற்றை மீண்டும் மீண்டும் எண்ணிப் பாருங்கள்.தேர்வுக்கு முந்தைய நாட்களில் நன்றாக தண்ணீர் குடிக்க வேண்டும் ஏனென்றால் உடலின் வெப்பநிலையை சீராக வைத்திருக்க தண்ணீர் உதவும். மேலும் தேர்வு நாட்களில் சத்தான ஆகாரங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். தேர்வு சமயங்களில் பால், காய்கறிகள், கீரைகள், பயறு வகைகள், நெல்லிக்காய், திராட்சைப் பழம், பேரீச்சம்பழம் போன்ற சத்தான ஆகாரங்களை எடுத்துக் கொள்ளுங்கள். இவை உங்களுக்கு அதிக சக்தியும் அளிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும் கொடுக்கும். தேர்வு நேரங்களில் அசைவ சாப்பாட்டினை தவிர்த்தல் மிகவும் நல்லது.


தேர்வுக்கு முந்தைய நாள் இரவே தேர்வுக்கு தேவையான தரமான பேனா, பென்சில், பெரிய ஸ்கேல், சின்ன ஸ்கேல் (இரண்டுமே தேவை), ஷார்ப்னர், பென்சில் அளிப்பான், ஜியாமெட்ரி பாக்ஸ் போன்ற அனுமதிக்கப்படக்கூடிய எழுது பொருட்களை தயார் நிலையில் வைத்துக் கொண்டால் தேர்வு அன்று காலையில் பதட்டமடைய தேவையில்லை. நீண்ட நேரம் விழித்துப் படிப்பதைவிட அதிகாலை எழுந்து படிப்பது சாலச் சிறந்தது. தேர்வு அன்று அரைமணி நேரம் முன்னதாகவே தேர்வு மையத்திற்கு செல்வது மிகவும் நல்லது. நீண்ட தூரம் சென்று தேர்வு எழுத வேண்டிய மாணவர்கள் முன்னதாகவே புறப்பட்டு பேருந்துப் பயணத்தையோ, தனியான வாகனம் என்றால் பெற்றோருடனோ செல்வது நல்லது. நாமாகவே வண்டி ஓட்டிச் செல்லுதல் தவிர்க்க வேண்டிய ஒன்று. தேர்வு மையத்தினை அடைந்தவுடன் நமது தேர்வு அறையை தெரிந்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். தேர்வு மையத்தில் மற்ற மாணவர்களோடு அரட்டையில் ஈடுபடாமல் தனியாக அமர்ந்து படித்தவற்றை மிக அமைதியாக சிந்தித்துப் பார்த்தல் நல்ல மனநிலையினைக் கொடுக்கும். பதட்டத்தைக் குறைக்கும். நம்முடைய மனப்பாட சக்தியையும் அதிகரிக்கும். தேர்வு அறைக்கு செல்லுமுன்னர் பெற்றோரையும், கற்றுக்கொடுத்த ஆசிரியரையும், உங்களுக்கு விருப்பமான தெய்வத்தினையும் ஒரு கணம் நினைத்துப் பாருங்கள். உங்கள் தன்னம்பிக்கை பெருகும்.


தேர்வு மையத்தில் அறிவிப்புப் பலகையில் குறிப்பிடப்பட்ட அறிவுரைகளை நன்கு பின்பற்றி தேர்வு எழுதுங்கள். தேர்வு அறையில் மிகவும் அமைதியாகவும், கண்ணியத்தோடும் நடந்து கொள்ளுங்கள். தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே எழுதி முடித்து விடுங்கள். பின்னர் அனைத்து கேள்விகளையும் எழுதி விட்டோமா என்பதை சரிபாருங்கள். இப்படிச் செய்தால் நமக்கு விடை தெரிந்த கேள்விகளை விடுபடாமல் விடை எழுதிட உதவும்.படங்கள் வரைய வேண்டிய கேள்விகளை தவிர்த்தல் நல்லது. ஏன் தெரியுமா ? அப்படிப்பட்ட கேள்விகளுக்கு எழுதவும் வேண்டும் படமும் வரைய வேண்டும். படத்திற்கு பாகங்களும் குறிக்க வேண்டும் இது நமது நேரத்தையும் வீணாக்கும். எனவே படங்கள் உள்ள கேள்விகளை தவிர்த்தல் நல்லது. 2 வினாக்களில் படம் உள்ள கேள்விதான் உங்களுக்கு நன்றாக தெரியும் என்றால் அந்த சூழ்நிலையில் படம் வரைய வேண்டிய வினாக்களை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். சூழ்நிலையைப் பொறுத்து முடிவு செய்யுங்கள்.


இது விதி விலக்காகும். முக்கியமான கருத்துக்களை அடிக்கோடிட்டு காட்ட வேண்டியது மிகவும் அவசியம். தேர்வு முடிந்த பிறகு எழுதிய தேர்வைப் பற்றிக் கவலை கொள்ளாதீர்கள். உற்சாகத்தோடு அடுத்த தாளுக்கு தயாராகுங்கள். அடுத்த நாள் தேர்வு எந்த தேதியில் நடைபெறுகிறது? என்ன பாடம்? என்பதை மிக கவனமாக உறுதி செய்து கொள்ளுங்கள். உங்கள் சூழ்நிலையில் லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள். இப்படிச் செய்வீர்கள் என்றால் எல்லாத் தேர்வுகளிலும் உங்களுக்கு வெற்றி நிச்சயமே. வாழ்த்துகள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Comments

Popular posts from this blog