TNPSC Exam Preparation: உள்ளங்கையில் அரசுப்பணி 16: புவியியலில் முழு மதிப்பெண்கள்: எளிதாகப் பெறுவது எப்படி?




அரசு அதிகாரிகள் உட்பட எந்தவொரு நபருக்கும் புவியியல் குறித்த அடிப்படை அறிவு தேவை


புவி அமைவிடங்கள், இயற்கை உருவாக்கங்கள், அவை உருவான விதம், வாழ்வியலில் ஏற்படுத்திய தாக்கம் ஆகியவற்றை அறிந்துகொள்வதன் மூலமே, ஒருவர் நிர்வாகப் பணியில் சிறப்பாக ஈடுபட முடியும்.


குரூப் 4 தேர்வுக்குத் தயாராக புவியியல்‌ பாடத்தில் புவி அமைவிடத்தை எப்படிப் படிக்க வேண்டும்? என்பது பற்றிக் கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். மீதமுள்ள பாடத்திட்டங்களை எப்படிப் படிப்பது என்று ஆட்சிக் கல்வி ஐஏஎஸ் அமைப்பைச் சேர்ந்த செல்வ ராம ரத்னம் கூறியதாவது:


''2. போக்குவரத்து - தகவல்‌ தொடர்பு.


3. தமிழ்நாடு மற்றும்‌ இந்தியாவில்‌ மக்கள்‌ தொகை அடர்த்தி மற்றும்‌ பரவல்‌.


4. பேரிடர்‌ - பேரிடர்‌ மேலாண்மை - சுற்றுச்சூழல்‌ - பருவநிலை மாற்றம்‌.


போக்குவரத்து - தகவல்‌ தொடர்பு


போக்குவரத்து பகுதியைப் பல பிரிவுகளாகப் பிரித்துப் படிக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலை, ரயில்வே, விமான நிலையங்கள், மெட்ரோ நிலையங்கள், துறைமுகங்கள், நீர்வழிப் போக்குவரத்து என்று பிரித்துக்கொள்ள வேண்டும்.


தேசிய நெடுஞ்சாலை பகுதியில், மத்திய அரசின் பாரத் மாலா, பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா உள்ளிட்ட (Pradhan Mantri Gram Sadak Yojana) திட்டங்கள், எட்டுவழிச் சாலை, அதன் தடங்கள், மாநில நெடுஞ்சாலைத் திட்டங்கள் சார்ந்து படிக்க வேண்டும்.


ரயில்வே போக்குவரத்து சார்ந்த பகுதியைப் படிக்கும்போது ஏதாவது ஒரு ரயில் நிலையத்தில் சோலார் பொருத்தப்பட்டிருக்கும் அல்லது அதிவேக ரயில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும். அதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதேபோல 19 ரயில்வே மண்டலங்கள் குறித்தும் படித்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொன்றுக்கும் ஒரு தலைமை அலுவலகம் இருக்கும். அதில் இருந்து ஒரு கேள்வி நிச்சயம் கேட்கப்படும்.


அதேபோல, அகலப் பாதை ரயில்வேயின் அகலம் என்ன?


இந்தியாவின் கிசான் ரயில் எந்த இடங்களுக்கு இடையே இயக்கப்படுகிறது?


இந்தியாவில் உள்ள ரயில்வே மண்டலங்களின் மொத்த எண்ணிக்கை என்ன?


என்பது மாதிரியான கேள்விகள் கேட்கப்படலாம். அதேபோல மெட்ரோ குறித்து நிச்சயம் கேள்வி இருக்கும். உதாரணத்துக்கு, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின்கீழ் முதல்கட்டமாக எத்தனை கி.மீ. உருவாக்கப்பட்டது? என்பது மாதிரியான கேள்விகள் அவசியம்.


துறைமுகங்கள்


கிழக்குப் பகுதி, மேற்குப் பகுதியில் உள்ள துறைமுகங்கள் என்னென்ன? என்று தெரிந்துகொள்ள வேண்டும். வரிசைப்படுத்துதல் முறையில் துறைமுகங்கள் பற்றிக் கேட்கவும் வாய்ப்புள்ளது. எண்ணூர், தூத்துக்குடி உள்ளிட்ட தமிழக துறைமுகங்களுக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.


விமான நிலையங்கள் தொடர்பான பகுதியில், அண்மையில் பிரதமர் மோடி ஏதாவது ஒரு விமான நிலையத்தைத் தொடங்கி வைத்திருப்பார். விமான நிலையம் தனியார்மயம் ஆக்கப்பட்டிருக்கும். விபத்துகள் எங்காவது நடைபெற்றிருக்கும். அதுகுறித்த தகவல்களைப் படிக்க வேண்டியது அவசியம்.


எந்த இடத்தில் இருந்து எந்தெந்த இடங்கள் வரை தேசிய நீர்வழிச் சாலை அமைந்துள்ளது? முதன்முதலாக எந்தப் பகுதியில் நீர்வழிப் போக்குவரத்து நடைபெற்றது? என்று படிக்க வேண்டும். ஆறுகளோடு நீர்த் தேக்கங்கள், அணைகள் குறித்தும் படிக்க வேண்டும். உதாரணத்துக்கு, மேட்டூர் நீர்த் தேக்கம் எந்த நீர்த் தேக்கம் என்று அழைக்கப்படுகிறது? (ஸ்டாலின் நீர்த் தேக்கம்).


போக்குவரத்துப் பகுதியில் தமிழகத்தில் இருந்து, சேலம் 8 வழிச் சாலை, சென்னை மெட்ரோ ரயில் முதல்கட்டமாக எத்தனை கி.மீ. தொலைவுக்கு இயக்கப்பட்டது? என்பன மாதிரியான கேள்விகள் கேட்கப்படலாம்.


தகவல்‌ தொடர்பு


இந்தப் பகுதியை அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்து படிக்க வேண்டும். இஸ்ரோ மற்றும் அதன் உருவாக்கங்களை அவசியம் படிக்க வேண்டும். ஐஆர்எஸ், ஐஆர்என்எஸ் செயற்கைக்கோள் (The Saga of Indian Remote Sensing Satellite System - ISRO), ராக்கெட், ஜிபிஎஸ், அண்மையில் ஏவப்பட்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்.


இஸ்ரோ பள்ளிக் குழந்தைகளுக்காக ஏற்படுத்திய சிறப்புத் திட்டம் என்ன?


ககன்யா திட்டத்தின்கீழ் விண்வெளிக்குச் செலுத்தப்படும் அரை மனித ரோபோவின் பெயர் என்ன?


இஸ்ரோ 2020 நவம்பர் 7ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்வெளிக்குச் செலுத்திய புவி கண்காணிப்பு செயற்கைக்கோளின் பெயர் என்ன?


இவையெல்லாம் கடந்த காலங்களில் கேட்கப்பட்ட கேள்விகள்.


3. தமிழ்நாடு மற்றும்‌ இந்தியாவில்‌ மக்கள்‌ தொகை அடர்த்தி மற்றும்‌ பரவல்‌


இந்தப் பகுதியில் மதிப்பெண்களை அள்ள, அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களின் வரிசைகளை (குறைந்தபட்சம் 10 மாநிலங்கள்) அறிந்து வைத்துக்கொள்ள வேண்டும். மக்கள்தொகை அளவு, அடர்த்தி, அடர்த்தியைப் பொறுத்து மாநிலங்களின் வரிசை, பிறப்பு வீதம், இறப்பு வீதம், மக்கள்தொகை கணக்கெடுப்பு, 2011 கணக்கெடுப்பு, மக்கள்தொகை உயர்வதற்கான காரணங்கள் உள்ளிட்ட பகுதிகள் இதில் முக்கியம்.


தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், 2011 கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கள்தொகை அடர்த்தி என்ன? சாதிவாரிக் கணக்கீடு என்பது மாதிரியான மாநிலத் தகவல்கள் அவசியம்.


கனிம வளங்கள் மற்றும் இயற்கை வளங்களுக்குக் கீழே தொழிற்சாலைகள் கூறித்துப் படிக்க வேண்டும். தமிழக அளவில் தொழிற்சாலைகள் சம்பந்தமாகவும் படிக்க வேண்டும். இரும்பு நகரம் என்று அழைக்கப்படும் நகரம் (சேலம்), ஜவுளி உற்பத்தி நகரம் (ஈரோடு), ஆட்டோமொபைல் நகரம் மற்றும் ஆசியாவின் டெட்ராய்டு - சென்னை என்பது மாதிரியான தகவல்கள் முக்கியம்.


4. பேரிடர்‌ - பேரிடர்‌ மேலாண்மை - சுற்றுச்சூழல்‌ - பருவநிலை மாற்றம்‌


பேரிடர் மேலாண்மைக்குத் தமிழகம் பகுதியில் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துப் படிக்க வேண்டும். இந்திய, உலக அளவிலான பேரிடர் மேலாண்மை முறைகளும் முக்கியம். பேரிடர்‌ மேலாண்மைச் சட்டங்கள், அவசர கால நடவடிக்கைகளும் முக்கியம். பேரிடர்களின்போது ஏற்பட்ட புயல்கள், அவை கரையைக் கடந்த இடங்கள், அவற்றால் ஏற்பட்ட சேதங்கள், மீட்பு நடவடிக்கைகளும் முக்கியம்.


சுற்றுச்சூழல்


இதில் ஒளிச்சேர்க்கை, உணவுச் சங்கிலி, பல்லுயிர்ப் பெருக்கம், மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் இமய மலை உள்ளிட்ட பல்லுயிர்ப் பெருக்கம் ஆகியவை பற்றிப் படிக்க வேண்டும். சூழல் சட்டம், பல்லுயிர்ப் பெருக்கம், காற்று மாசுபாடு, வன உயிரிகள் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட சூழலியல் சார்ந்த திட்டங்கள் பற்றிய அறிவு முக்கியம். இதில் இருந்து ஒரு கேள்வி நிச்சயம் உண்டு.


அதேபோல சுற்றுச்சூழல் பகுதியில் பூங்காக்கள், சரணாலயங்கள் சார்ந்து படிக்க வேண்டும். ரப்பர் விளைவதற்கான காலநிலை, மழை அளவு கன்னியாகுமரியில் உகந்ததாக இருக்கும். அதுபோல ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான பயிர்கள் விளையும். புவியியல் அமைப்புக்கு ஏற்ற வகையில் இந்த செயல் நடைபெறுகிறது. வேளாண் சூழலியல் மண்டலங்கள் குறித்தும் படிக்க வேண்டியது அவசியம். இந்தியாவில் உள்ள முக்கியமான மலைகள், கணவாய் குறித்துப் படிக்க வேண்டும்.


பருவநிலை மாற்றம்‌


பருவநிலை மாற்றம் குறித்துப் படிக்கும்போது இயற்கை சுழற்சியில் ஏற்படும் பிறழ்வுகளைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு அதீத வெயில், அமில மழை உள்ளிட்ட மாசுபாடு, பருவம் தப்பிப் பெய்யும் மழை, காற்று, தொழிற்சாலை மாசுபாடுகள், ஓசோன் ஓட்டை ஆகியவை என்றால் என்ன, அவற்றுக்கான காரணம் பற்றிப் படிக்க வேண்டும். தமிழக, இந்திய, உலக அளவில் பருவநிலை மாற்றத்துக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், குறிப்பாக பாரீஸ் ஒப்பந்தம், International Solar Alliance உருவாக்கம் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்.


உயிர்த் திரள், இயற்கை வாயு உள்ளிட்ட எரிசக்தி (Energy) பற்றிய அறிமுகம் அவசியம். புதுப்பிக்கத்தக்க வகையிலான ஆற்றல் வளங்களான சோலார், காற்றாலை, நீர்மின் ஆலை பற்றியும் படிக்கவேண்டும்.


மேப்பில் இருந்து கண்டிப்பாக ஒரு கேள்வி கேட்கப்படும். இந்தியாவின் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் மாநிலங்கள், சர்வதேச எல்லையைப் பகிர்ந்துகொள்ளாத மாநிலம் மாதிரியான கேள்விகள் கேட்கப்படலாம். மேற்குறிப்பிட்ட வகையில் படித்தால், புவியியல் பாடத்தில் முழு மதிப்பெண்களை அள்ளலாம்''.


Comments

Popular posts from this blog