கடினமான கணித வினாத்தாள், பாடத்திட்ட குழப்பத்தால் 10-ம் வகுப்பு தேர்ச்சி சரிவு - இதுவரை இல்லாத அளவுக்கு 5% வரை குறைந்தது





பாடத்திட்டக் குழப்பம், கடினமான கணித வினாத்தாள் காரணமாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் இதுவரை இல்லாத அளவுக்கு 5 சதவீதம் வரை தேர்ச்சி குறைந்துள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.



தமிழகப் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே 6 முதல் 30-ம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை 9.12 லட்சம் மாணவர்கள் எழுதினர். இதில் 90.07 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 2019-ம் ஆண்டைவிட 5 சதவீதம் குறைவாகும். வழக்கத்தை விட தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு பாடத்திட்டக் குழப்பம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை ஆசிரியர்கள், கல்வியாளர்கள் முன்வைக்கின்றனர்.


இதுகுறித்து கல்வியாளர் செல்வக்குமார் கூறியதாவது:


10-ம் வகுப்பு தேர்ச்சி சரிவதற்கு அரசுப் பள்ளிகளின் பின்னடைவு முக்கிய காரணம். ஏனெனில், 10-ம் வகுப்பு தேர்வெழுதிய 9.12 லட்சம் மாணவர்களில் 8.21 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 90,626 பேர் தோல்வி அடைந்துள்ளனர். அதில் அரசுப்பள்ளி மாணவர்கள் மட்டும் 57,437 (63%) பேர். ஒட்டுமொத்தமாக அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி 85.25 சதவீதமாக உள்ளது. 2019-ம் ஆண்டைவிட 7 சதவீதம் குறைவு.


அதேநேரம் தனியார் பள்ளிகள் இந்த ஆண்டு 98.31% தேர்ச்சி பெற்றுள்ளன. இது முன்பைவிட 0.7 சதவீதம் மட்டுமே குறைவாகும். அரசுப் பள்ளிகள், மாணவர்களை தேர்வுக்கு முறையாக தயார் செய்யாததால் தேர்ச்சி சரிந்துள்ளது. விடைத்தாள் திருத்துதலில் கடுமை இல்லாததால்தான் இந்தளவு தேர்ச்சிகூட வந்துள்ளது. எனவே, அரசு, அரசு உதவிப் பள்ளிகளில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து துணைத் தேர்வில் பங்கேற்க வழிசெய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


அரசுப் பள்ளி கணித ஆசிரியர்கள் இதுதொடர்பாக கூறியதாவது:


அரசு பள்ளிகளைப் பொறுத்தவரை 2 ஆண்டு கரோனா விடுமுறை காலம் பெரும் சிக்கலாக மாறிவிட்டது. 8-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் 9-ம் வகுப்பு பாடத்தை படிக்காமலேயே நேரடியாக 10-ம் வகுப்புக்கு தேர்ச்சி செய்யப்பட்டனர். ஏற்கெனவே 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி வழங்கப்படுவதால் 40 சதவீத மாணவர்கள் அடிப்படை கற்றல் நிலையிலேயே இருப்பார்கள். 9-ம் வகுப்பில்தான் படிப்படியாக பயிற்சி அளித்து பொதுத்தேர்வுக்கு அவர்களை தயார் செய்வோம்.


ஆனால், நடப்பாண்டு அந்த சூழல் இல்லாததால் மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்வதில் சிரமங்கள் இருந்தன. இதுதவிர குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் குறித்து இறுதிவரை தெளிவின்மையே நிலவியது. இதனால் பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் கடைசி பருவப்பாடங்கள் கடைசி வாரங்களில்தான் நடத்தி முடிக்கப்பட்டன. அதேநேரம் பொதுத்தேர்வில் இறுதி பருவப் பாடத்தில் இருந்து 20 முதல் 30 சதவீதம் வரையான கேள்விகள் இடம்பெற்றன.


குறிப்பாக கணித வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்தது. நுழைவுத் தேர்வை அடிப்படையாகக் கொண்டு நுண்ணறிவு அடிப்படையில் பெரும்பாலான கேள்விகள் இடம்பெற்றதால் மாணவர்கள் சிரமப்பட்டனர். இதனால் விடைக்குறிப்பை எளிமையாக வடிவமைக்க வேண்டுகோள் விடுத்தும் தேர்வுத்துறை மறுத்துவிட்டது. அதன் தாக்கமாக கணிதத்தில் மட்டும் 82 ஆயிரம் பேர் வரை தோல்வி அடைந்துள்ளனர். எனவே, சிபிஎஸ்இ போல் வினாத்தாள் வடிவமைப்பில் குறிப்பிட்ட அளவே கடினத் தன்மையைப் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


ஓய்வுபெற்ற ஆசிரியர் கு.பால்ராஜ் கூறும்போது, ''10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 8.21 லட்சம் மாணவர்களில் சுமார் 5.8 லட்சம் பேர் 350-க்கும் கீழ்தான் மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். அவர்கள் பெரும்பாலும் பிளஸ் 1 வகுப்பில் கலை, தொழிற்பிரிவு பாடங்கள் மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளுக்குத் தான் முக்கியத்துவம் தருவார்கள். அறிவியல் பிரிவைத் தேர்வை செய்பவர்கள் எண்ணிக்கை குறையக்கூடும்.


மேல்நிலை வகுப்புகளில் கடின பாடத்திட்டமும் ஒரு அச்சுறுத்தலாக மாணவர்களுக்கு தென்படுகிறது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு கணிதப் பாடத்துக்கும் செய்முறைத் தேர்வை கொண்டுவர முன்வர வேண்டும்'' என்றார்.

Comments

Popular posts from this blog